ADVERTISEMENT

அரசியல் கூட்டங்கள் : மக்களின் பாதுகாப்புக்கு கட்சியினரே பொறுப்பு : தமிழக அரசு!

Published On:

| By Kavi

அரசியல் கட்சியினரின் பொதுக்க்கூட்டங்களின் போது பொது மக்களின் பாதுகாப்புக்கு அக்கட்சியினரே பொறுப்பேற்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு வழிமுறைகளை வகுக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

ADVERTISEMENT

இந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து நவம்பர் 6ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் கூடி, அரசியல் கட்சிகளுக்கு 20க்கும் மேற்பட்ட பரிந்துரைகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில் இவ்வழக்கு மீண்டும் இன்று (நவம்பர் 21) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

ADVERTISEMENT

என்னென்ன நெறிமுறைகள்

அப்போது, அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களுக்கு வரைவு வழிக்காட்டு நெறிமுறைகளை தமிழக அரசு தாக்கல் செய்தது.

அதில், “5000 பேருக்கு மேல் திரள்வார்கள் என்று எதிர்பார்க்க கூடிய பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், ரோடு ஷோக்கள், ஆர்ப்பாட்டம், போராட்டம் மற்றும் கலாச்சார, மத நிகழ்வுகளுக்கு இந்த விதிகள் பொருந்தும்.

ADVERTISEMENT

வழிப்பாட்டு தளங்களில் நடைப்பெறும் மத ரீதியான கூட்டங்களுக்கு பொருந்தாது.

தேர்தல் சமயங்களில் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது, தேர்தல் ஆணையம் வெளியிடும் விதிகள் மட்டுமே அமலில் இருக்கும். எனினும், கூட்டக் கட்டுப்பாடு, குடிநீர்,கழிவறை உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளை வழங்க செய்யும் இந்த விதிகளை அமல்படுத்துவது ஏற்பாட்டாளர்களின் பொறுப்பு.

5 ஆயிரத்திற்கும் குறைவாக மக்கள் திரளும் கூட்டங்களுக்கு இது பொருந்தாது. ஆனால் தற்போதைய நடைமுறைகளை பின்பற்றி அனுமதி பெற வேண்டும் என்ற விதிகள் தொடரும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில், “பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், ரோடு ஷோக்கள், ஆர்ப்பாட்டம், போராட்டம் ஆகிவை நடைப்பெற உள்ள இடங்களை, போலீஸ் அதிகாரிகள், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் ஆலோசித்து மாவட்ட ஆட்சியர் முடிவெடுத்து அறிவிப்பார்.

பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட அரசியல் நிகழ்வுகளுக்கு முன் தேதி, நேரம், எதற்காக அந்த கூட்டம் நடத்தப்படுகிறது, எவ்வளவு மக்கள் பங்கேற்பார்கள், எத்தனை வாகனங்கள் வரும், எந்த தலைவர் வருவார் போன்ற விவரங்களை குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்

ரோடு ஷோக்களை பொருத்தவரை முக்கிய தலைவர்கள் பிரச்சாரத்தை தொடங்கும் இடம் மற்றும் முடிக்கும் இடம், பொதுக்கூட்டங்கள் நடைப்பெறும் இடம் ஆகியவற்றை குறிப்பிட்டு தெரிவிக்க வேண்டும்

தலைமை விருந்தினர்கள் வருகை தரும் நேரம் மற்றும் புறப்படும் நேரத்தையும் விண்ணப்பத்தில் தெரிவிக்க வேண்டும்.

கூட்டத்துக்கு எவ்வளவு மக்கள் பங்கேற்க முடியும் என்பதை பொதுப்பணித்துறை பொறியாளர் சம்பந்தப்பட்ட பகுதியை ஆய்வு செய்து சான்றிதழ் அளிக்க வேண்டும். எனவே, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பொதுப்பணித்துறையிடம் விண்ணப்பிக்க வேண்டும்

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் பொதுக் கூட்டம் மற்றும் ரோடு ஷோக்கள் நடத்த சம்பந்தப்பட்ட துறைகளின் அனுமதி அவசியம்.

நிகழ்ச்சிகளுக்கு 10 நாட்களுக்கு முன் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும்

30 நாட்களுக்கு முன்

அதேசமயம், 50 ஆயிரம் பேருக்கு மேல் திரள்வார்கள் என எதிர்ப்பார்க்க கூடிய கட்சி மாநாடுகள் போன்ற நிகழ்வுகளுக்கு 30 நாட்களுக்கு முன் அனுமதி கேட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.

திடிரென ஏற்பாடு செய்யப்பட கூடிய ஆர்ப்பாட்டம் போராட்டங்களை பொருத்தவரை மாவட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியரும், சென்னைக்கு மாநகர காவல் ஆணையரும் முடிவெடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களில் முதலுதவி, ஆம்புலன்ஸ் வசதி, உள்ளிட்ட மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்த விவரங்களை தெரிவிக்க வேண்டும்.

குறிப்பாக நேரத்தை கண்டிப்புடன் பின்ற்ற வேண்டும். கூட்டத்துக்கு வரும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே முழு பொறுப்பு. கூட்டத்தின் போது பொது மற்றும் தனியார் சொத்துகள் சேதமடைந்தால் அதற்கான இழப்பீட்டை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஏற்க வேண்டும். அந்த கூட்டம் முடிந்த பின் அவ்விடத்தை முழுமையாக தூய்மை செய்து கொடுக்க வேண்டும்.

கர்ப்பிணி பெண்கள், மூத்த குடிமக்கள், குழந்தைகள், மாற்றுதிறனாளிகளை நீண்ட நேரத்திற்கு நிற்க வைக்காமல், அவர்கள் பாதுகாப்பாக நிகழ்ச்சியில் பங்கேற்க தேவையான அனைத்து வசதிகளையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்து கொடுக்க வேண்டும்.

முக்கியமாக, நிகழ்ச்சி துவங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பே நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி அமர்வு முன் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை அரசின் கூடுதல் வழக்கறிஞர் ஜெனரல் ரவீந்திரன் தாக்கல் செய்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share