எம் ஜிஆர் பிறந்தாள் : மோடி, இபிஎஸ், விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து செய்தி

Published On:

| By Pandeeswari Gurusamy

நடிகரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 109 ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எம்ஜிஆர் பிறந்த நாளையொட்டி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், “எம்.ஜி.ஆரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு அவரது பங்களிப்பு மகத்தானது. தமிழ்க் கலாச்சாரத்தைப் பிரபலப்படுத்துவதிலும் அவரது பங்கு அதே அளவுக்குக் குறிப்பிடத்தக்கது. சமூகத்திற்கான அவரது தொலைநோக்குப் பார்வையை நனவாக்க நாங்கள் எப்போதும் பாடுபடுவோம்.” என குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பதிவில்,”‘பொன்மனச் செம்மல்’ புரட்சித் தலைவர் ‘பாரத் ரத்னா’ டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 109-ஆவது பிறந்த நாள், எங்கள் தங்கத்தின் பிறந்த நாள்…
அதிமுக எனும் மாபெரும் மக்கள் பேரியக்கத்தை உருவாக்கிய மக்கள் திலகத்தின் பிறந்த நாள்.

தீய சக்தியின் ஆட்சியிலே இருள் சூழ்ந்திருந்த தமிழகத்தை மீட்டெடுத்து ஒளியேற்றி, குடும்ப ஆட்சிக்கும், கொடுங்கோல் ஆட்சிக்கும் முடிவு கட்டி, மக்கள் ஆட்சியை உருவாக்கியதோடு, சட்டமன்றத் தேர்தலில் தொடர் வெற்றியைப் பெற்று கழகத்திற்கு பெருமை சேர்த்திட்ட மகத்தான தலைவராம் நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை அவர்தம் பிறந்தநாளில் போற்றி வணங்கி,

ADVERTISEMENT

தமிழ் மொழிக்காக, தமிழ் இனத்திற்காக, தமிழ் நாட்டிற்காக, தன்னையே அர்ப்பணித்து, தமிழர்களை தலைநிமிர வைப்பதற்கும்; அநீதியை அழித்து, நீதியை நிலைநாட்டுவதற்கும் அவர் ஏந்திய ஆயுதமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு, நம் அரசியல் எதிரிகள் எத்தனை திட்டங்கள் தீட்டினாலும், அவை அனைத்தையும் தவிடுபொடியாக்கி, தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்குகின்ற கடமையும், பொறுப்பும், நம் அனைவர் முன்பும் இருக்கின்றது.

அந்தப் பயணத்தில் கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவருடைய உழைப்பும், ஆர்வமும் மிகவும் இன்றியமையாததாகும். உங்கள் முயற்சிகள் அனைத்திற்கும் என்றென்றும் நான் உறுதுணையாக இருப்பேன். நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வோம்; வெற்றிவாகை சூடுவோம்!” என குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பதிவில், தமிழக மக்களின் நெஞ்சங்களில்
பொன்மனச் செம்மலாக, ஏழை, எளியோருக்கான நலத்திட்டங்களின் நாயகராக,
பேரறிஞர் அண்ணா அவர்களின் ஜனநாயகப் பாதையில், சாமானியர்களுக்கும் அதிகாரமளித்து, மக்களாட்சி செய்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த நாளில், அவருக்கு என் புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல் ஹாசன் தனது எக்ஸ் பதிவில், “பெயர் சொன்னாலே நெஞ்சில் ஒரு நெகிழ்ச்சி ஏற்படும். அவர் மடியில் நானமர்ந்த நினைவுகள் பூ மலர்த்தும். கலையில், அரசியலில், நிர்வாகத்தில் அவர் ஈட்டிய அபிமான உள்ளங்கள் இன்றைக்கும் தொடர்ந்திருக்கும். பொன்மனச் செம்மல் எனக் கொண்டாடும் குரலிருக்கும். எம்ஜிஆர். இன்று பிறந்த நாள். அவர் நாமம் வாழ்க.” என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share