சிறப்புக் கட்டுரை: அகதிகளுக்குப் புகலிடம், குடிமக்களுக்குக் கொலைக் களம்!

Published On:

| By Balaji

எஸ்.வி.ராஜதுரை

 2018ஆம் ஆண்டிற்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு போலந்து எழுத்தாளர் ஓல்கா டுகார்சுக்குக்கு  வழங்கப்பட்டதை மகிழ்ச்சியோடு வரவேற்ற இலக்கிய இரசிகர்களில் நானும் ஒருவன்.

ADVERTISEMENT

ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள அவரது  சிறுகதைகளில் ஒன்றைக்கூட நான் படித்ததில்லை என்றாலும்அவரது மூன்று நாவல்களையும்,  குறைந்தது  ஐந்து நேர்காணல்களையும் படித்திருப்பதுடன் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள், வளர்ப்பு மகன் ஆகியோரிடம் அவற்றைப் பகிர்ந்திருக்கிறேன். 

“இறந்தவர்களின் எலும்புகள் மீது  உங்கள் ஏரை ஓட்டுங்கள்’ என்ற  நாவலின் கதைத் தலைவியின் உரையாடல்கள் வழியாக  சோதிடத்தில் தமக்குள்ளஅபார அறிவை வெளிப்படுத்தி  நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார் ஓல்கா.  அமாவாசை, பெளர்ணமி,வளர்பிறை, தேய்பிறை, நட்சத்திரங்கள் வானத்தில் இருக்கும் நிலை, கிரகங்களின் பார்வைஉச்சம், நீச்சம், ஆட்சி திசைகள் ஆகியன மனிதர்களின் குணாம்சங்களையும் அவர்களது செயல்பாடுகளையும் நிர்ணயிக்கின்றன என்று கருதுகிறார் அந்த நாவலின் கதைத் தலைவி. 

ADVERTISEMENT

பாலங்கள், சாலைகள் கட்டுவதில் நிபுணத்துவம் பெற்றிருந்த பொறியியலாளரான அவர் தமது கடைசிகாலத்தில் போலந்தின் தொலைதூர கிராமமொன்றில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய பின் குளிர்காலம் வரை காலியாக வைக்கப்பட்டுள்ள நகரவாசிகளின் வீடுகளைப் பராமரித்து வருகிறார். விலங்குகளையும் காடுகளையும் நேசிக்கும் அவர், ஓல்காவைப் போலவே சைவ உணவு உண்பவர்; நாட்டெல்லைகள் என்பன செயற்கையானவை என்று கூறுபவர்.“அலைக்கற்றைகளுக்கு நாட்டெல்லைகள் உண்டா?’ என்று கேட்பவர். கடைசி அத்தியாயங்களில்தான்அந்த நாவல் ஒரு ‘த்ரில்லர்’ என்பது நமக்குத் தெரியவருகிறது.

கானுயிர்களைக் கண்மூடித்தனமாக வேட்டையாடி மகிழ்பவர்கள் பழிதீர்க்கப்பட்டு வருவதும் கதாநாயகியும் அவரது நண்பருமாகச் சேர்ந்து அண்டை நாடான செக் குடியரசில் ஆங்கிலேயக் கவிஞரும் சோசலிசச் சிந்தனையாளருமான வில்லியம் பிளேக்கின் படைப்பொன்றை போலிஷ் மொழியில் மொழிபெயர்க்கும் தங்கள் திட்டத்தை வெற்றிகரமாகத் தொடர்வதும் இந்த நாவலில்  இழையோடிக்கொண்டிருக்கும் முக்கிய அமசங்கள்.ஜெர்மன் உளவியல் அறிஞர் கார்ல் யுங்கின் கோட்பாடுகளைப் பின்பற்றும் ஓல்கா டுகார்சுக், போலந்து நாட்டினருக்கு ஜார் ரஷியா, ஜாஜி ஜெர்மனி, சோவியத் ரஷியா ஆகியவை இழைத்த கொடுமைகளை தமது கதாபாத்திரங்கள் மூலமும், கட்டுரைகள், நேர்காணல்கள் மூலமும் நினைவுகூர்வதுடன் இன்றுபோலந்திலுள்ள வலதுசாரி அரசாங்கத்தின் தேசியவாதத்தையும், மற்ற இனங்கள் மீது  அந்த அரசாங்கமும் போலந்து மக்களின் ஒருபிரிவினரும் வெறுப்பும் ஒடுக்குமுறையும் செலுத்துவதையும் கடும் கண்டனத்துக்கு உள்ளாக்கி, மனித உரிமைகளைஉயர்த்திப் பிடிக்கும் களப் பணியாளராகவும் செயல்படுகிறார்.

ADVERTISEMENT

எனினும்,என்னைப் போன்றோருக்கு இப்போது கிடைத்த புதிய செய்தி: உலகளவில் அவர் புகழ்பெறுவதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்பே – 2014இல் –அவரது சிறு கதைத் தொகுப்பொன்று – (’அறைகளும் வேறுகதைகளும்’) நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் குடியேறி இந்தியக் குடியுரிமை பெற்றுள்ளவரும் கல்விப்புலம் சார்ந்தவருமான  மரியா புரி(Maria Puri) என்பவரால் ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அவரும் மோனிகா ப்ரோவர்சைக்(Dr Monica Bowarcyczyk).) என்ற இன்னொரு போலிஷ் பெண்மணியும் இணைந்து ஓல்காவின் மூன்றுநாவல்களை ஹிந்தியில் மொழியாக்கம் செய்து வருகின்றனர். 2014இல் உலகப் புத்தகக் கண்காட்சி டெல்லியில் நடந்த போது அங்கு வருகை தந்திருந்த  ஓல்கா டெல்லியில் பல்வேறு கலாசாரங்கள் சகவாழ்வு நடத்துவதைப் பார்த்திருக்கிறார். ராஜஸ்தானுக்கும் அமிர்தஸரசுக்கும் சென்றிருக்கிறார். அதிகாலையிலும் இரவு நேரத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் குருத்வாராவுக்குச் செல்வது அவருக்கு ஆச்சரியமளித்திருக்கிறது.  “இந்தியா என்னும் கருத்தைப் புரிந்து கொள்ளத் தனக்குப்  பல காலம் பிடிக்கும்” என்று சொல்லியிருக்கிறார்.கலாசாரப் பன்மைத்துவத்தை எப்போதும் வலியுறுத்திவரும் அவர் மீண்டும் இந்தியாவுக்கு வந்தால்,  “இந்தியா என்னும் கருத்துக்கு”இப்போது என்ன கதி ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வார்.

இது ஒருபுறமிருக்க,  ஹிந்தி மொழி நம் மீது திணிக்கப்படுவதைக் கண்டனம் செய்யும்  நாம் பிற நாட்டு இலக்கியங்களை மொழியாக்கம் செய்வதிலும் நவீன நாடகங்களை உருவாக்குவதிலும் ஹிந்தி  இலக்கிய உலகில் நடக்கும் சாதனைகளைக்  கண்டு பொறாமைப்பட்டுத்தான் தீர வேண்டும் ( ஹிந்திஇலக்கிய உலகிற்கும் மத்திய அரசாங்க ஆட்சியாளர்களின் ஹிந்தி வெறிக்கும் எந்த சம்பந்தமும்இல்லை.) வெற்றுத் தமிழ் முழக்கங்களை வெறும் அரசியல் நோக்கங்களுக்காக மட்டுமே  எழுப்புவர்கள் தமிழ் மொழியை நவீனப்படுத்துவதில்- குறைந்தபட்சம் நல்ல ஆங்கிலம்- தமிழ் அகராதியை உருவாக்குவதில்கூட – முனைப்பைக் காட்டவோ,உழைப்பைச் செலுத்தவோ கடுகளவுகூட அக்கறை செலுத்தவில்லை.

இராஜதந்திரஉறவு என்ற வகையில் இந்தியாவுக்கும் போலந்துக்கும் நீண்டகால உறவு இருந்து வந்திருக்கிறது( இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பலர் போலந்து கம்யூனிஸ்ட் நாடாக இருந்தவரை அங்கு அடிக்கடி சென்று வந்ததும் உண்டு) என்பது அனைவருக்குத் தெரிந்த விஷயம். ஆனால்,போலந்து குடிமக்களுக்கும் இந்தியக் குடிமக்களுக்குமான தொடர்பு, ஓல்கா டெல்லிக்கு வருகைதந்த பல பத்தாண்டுகளுக்கும் முன்பே இருந்திருக்கிறது என்பதும் நமக்குப் புதிய செய்திதான்.

1943-48ஆம் ஆண்டுகளில், நாஜிகளின் கொடுமைகளிலிருந்தும் சோவியத் ஆக்கிரமிப்பிலிருந்தும் தப்பி வந்த  ஏறத்தாழ 5000 போலிஷ் குடும்பங்களுக்குத் தஞ்சமளித்திருக்கிறது மகாராஷ்டிராவின் கோலாப்பூர் மாவட்டதைச் சேர்ந்த வலிவடெ என்னும் சிறு கிராமம். அந்த அகதிகளுக்கான பள்ளிக்கூடங்களும் மாதா கோவிலும் கட்டப்படுவதற்கு அந்த கிராமவாசிகள் உதவியிருக்கின்றனர்.அந்தக் குடும்பங்களின் வாரிசுகள் பலர் ஆண்டு தோறும் அந்த கிராமத்திற்கு வருகை தருகின்றனர்.அகதிகளாகவந்த 1000 போலிஷ் குழந்தைகளுக்குப் புகலிடம் தந்து அவர்களது உயிரைக் காப்பாற்றியிருக்கிறார்குஜராத் மாநிலத்தில் அப்போது இருந்த ஜாம்நகர் சமஸ்தான மன்னர் ஜாம்சாஹேப் திக்விஜய்சிங் ஜடேஜா. அந்த 1000 பேரில் உயிரோடு இருப்பவர்களில் 90 வயதைக்  கடந்துவிட்ட அறுவர், போலந்து நாடு ஜார் ரஷியாவிலிருந்து சுதந்திரமடைந்த 100 ஆம் ஆண்டு நிறைவை திக்விஜய் சிங் ஜடேஜாவின் நினைவைப் போற்றும் வண்ணமாக கடந்த 4ஆம் தேதியன்று ஜாம்நகரில் கொண்டாடியிருக்கிறார்கள்.

76ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டு அகதிகளுக்குப் புகலிடமும் உயிர் வாழ்வையும் அளித்த குஜராத்தும் மகாராஷ்டிரமும் இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து அந்த மாநிலங்களின் குடிமக்களில் ஒரு பிரிவினரின் உயிரைப் பறிக்கும், வாழ்வுரிமையை மறுக்கும் ஆட்சியாளர்களைக் கண்டு வருவது ஒரு  கொடூரமான வரலாற்று முரண், அகதிகளாக வந்த போலிஷ் குடும்பங்களுக்கு நினைவுத்தூண் எழுப்பபடவிருக்கிறது.  அதற்கான அஸ்திரவாரக்கல்லை இடுவதற்கு சென்ற மாதம் போலந்து நாட்டின் துணைப் பிரதமர் மகாராஷ்டிர கிராமத்திற்கு வந்திருந்தார்.  இன்று போலந்தில் உள்ள இனவாத வலதுசாரி அரசாங்கத்தைச் சேர்ந்தவர்தான் அவர் என்பது இன்னொரு வரலாற்று முரண்!

 இந்தியாவிற்கான போலந்து நாட்டுத் தூதர் ஆதாம் புராகோவ்ஸ்கி(Adam Burakowski)  இலக்கிய இரசிகர் மட்டுமல்ல;மொழிபெயர்ப்பாளரும்கூட. உலகப் புகழ்பெற்ற பாகிஸ்தானிய எழுத்தாளர் (தமிழ் இலக்கிய உலகிற்கு  நன்கு அறிமுகமானவர்) சதாத் ஹாஸன் மாண்டோவின் உருதுசிறுகதைகளை போலிஷ் மொழிக்குக் கொண்டு சென்றிருக்கிறார். இந்தியாவுக்கும் போலந்துக்குமான கலாசாரத் தொடர்பைப் பற்றிப் பேசுகையில், 19ஆம் நூற்றாண்டில் போலந்தின் கிராகோ நகரிலுள்ள  யாகீல்லோனியன் பல்கலைக் கழகத்தில் சம்ஸ்கிருத மொழித்துறை தொடங்கப்பட்டதாக ‘The Print’  ஏட்டிற்குக்கொடுத்த நேர்காணலொன்றில் குறிப்பிடுகிறார்.அண்மைக்காலம் வரை போலந்தின் தலைநகரான வார்ஸாவிலுள்ள பல்கலைக் கழகத்தில் தமிழுக்கென ஒரு  இருக்கையோ, துறையோ இருந்திருக்கிறது.

தமிழகத்திலிருந்து பல பேராசிரியர்கள் (அவர்களில் சிலர் எழுத்தாளர்களும்கூட) அந்தத் துறையில் பணியாற்றச் சென்றிருக்கிறார்கள். அவர்களில் யாரேனும் போலிஷ் மொழியைக் கற்றுத் தேர்ந்து, அந்த நாட்டு இலக்கியத்தை தமிழுலகத்திற்கு அறிமுகம் செய்திருக்கிறார்களா, மொழிபெயர்த்திருக்கிறார்களா என்பது தெரியவில்லை.  

கட்டுரையாளர் குறிப்பு

எஸ்.வி.ராஜதுரை மார்க்சியச் சிந்தனையாளரும், எழுத்தாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் தமிழக அரசியல் பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார். மனித உரிமை இயக்கத்தில் களப்பணி ஆற்றியவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராகப் பணிபுரிந்தவர். The Communist Manifesto என்னும் புகழ்பெற்ற நூலை ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்திருக்கிறார். வ.கீதாவுடன் இணைந்து மார்க்சியம், பெரியாரியம் சார்ந்த முக்கியமான நூல்களை எழுதியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share