உலக அளவில் இந்திய மசாலா பொருட்கள் மீதான சர்ச்சைகள் அதிகரித்து வரும் நிலையில், டெல்லியில் 15 டன் எடையிலான மரத்தூள், ஆசிட் ஆகியவற்றைக் கொண்டு கலப்படம் செய்யப்பட்ட மசாலா பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல நிறுவனங்களில் பேரில் போலி உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் டெல்லி மாநிலத்தின் வடகிழக்கு பகுதியில் கலப்படம் செய்யப்பட்ட மசாலா பொருட்களை தொழிற்சாலை அமைத்து சிலர் தயாரித்து விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தபோது பல்வேறு முன்னணி நிறுவனங்களின் பெயர்களில் போலி மசாலா பொருட்களை தயாரித்து அவற்றை டெல்லி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகள் மூலம் விற்பனை செய்தது தெரியவந்தது. இந்தக் கலப்பட பொருட்களில் மரத்தூள், ஆசிட் உள்ளிட்டவற்றை அவர்கள் கலந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தொழிற்சாலையின் உரிமையாளர்களான திலிப் சிங் (46), சர்ஃப்ராஜ் (32) ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மேலும், தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட போலி மசாலா பொருட்களை அருகிலுள்ள கடைகளுக்கு விற்று வந்த குர்ஷித் மாலிக் (42) என்பவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இவர்களிடமிருந்து 15 டன் எடையுள்ள போலி மசாலா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த மசாலா பொருட்களில் கலப்படம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 7,215 கிலோ எடையிலான கெட்டுப்போன அரிசி, சிறுதானியங்கள், தேங்காய்கள், மல்லி விதைகள், குறைந்த தரத்திலான மஞ்சள்,
யூகலிப்டஸ் இலைகள், மரத்தூள், சிட்ரிக் ஆசிட் மற்றும் தடை செய்யப்பட்ட செயற்கை நிறமிகள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த கலப்பட மசாலா தூள்கள் அனைத்தும் தற்போது ஆய்வுக்காக உணவு பாதுகாப்புத் துறையினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள போலீஸார், கலப்படத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”யானைகளின் வழித்தடம் என எங்கள் நிலங்களைப் பறிக்கிறார்கள்” : விவசாயிகள் வேதனை!
பியூட்டி டிப்ஸ்: நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை தடவை தலை வாருகிறீர்கள்?
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
ஹெல்த் டிப்ஸ்: சத்துப்பெட்டகம் நெல்லிக்காயைப் பிடிக்காதவர்களா நீங்கள்? இப்படிச் சாப்பிடலாமே..!