தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்திற்கு வருகை தரும் தொண்டர்கள் மரத்தில் ஏறாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் துறையினர் மரத்திற்கு மரம் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
தமிழக சட்டசபைத் தேர்தல் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் தேர்வு, கூட்டணி உள்ளிட்ட தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள நடிகர் விஜயின் தவெக கட்சியினரும் தங்களது தேர்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் நடிகர் விஜய் சம்பவம் நடந்த அன்றைய தினம் இரவே சென்னைக்கு கிளம்பி சென்றார். இதை தொடர்ந்து அக்கட்சியின் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் விஜய் கரூருக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு மாதம் கழித்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரம் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலுக்கு அழைத்து வந்து அவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
விஜயின் இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று சந்திப்பதே முறையாக இருக்கும் என்று பொதுமக்களும், சக அரசியல் கட்சியினரும் விமர்சனங்களை முன் வைத்தனர்.
இந்நிலையில் கடந்த மாதம் காஞ்சிபுரத்தில் ஒரு தனியார் கல்லூரியில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டு பேசினார். இதைத்தொடர்ந்து கடந்த ஒன்பதாம் தேதி நடிகர் விஜய் புதுச்சேரியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.
இதைத் தொடர்ந்து ஈரோடு விஜயமங்கலம் அருகே உள்ள சரளையில் இன்று மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக 16 ஏக்கர் பரப்பளவில் பொது கூட்டம் மைதானம் மிகப் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது இன்று காலை 11 மணி முதல் ஒரு மணி வரை கூட்டம் நடைபெற உள்ள நிலையில் நடிகர் விஜய் தற்போது சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் கிளம்பியுள்ளார். பின்னர் கோவையிலிருந்து கார் மூலம் நிகழ்ச்சி நடைபெறும் ஈரோடுக்கு செல்வார் என அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஈரோடு வரும் விஜய் கரூருக்கு போகவில்லையா என்று விஜயை கடுமையாக விமர்சித்து நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது
இந்நிலையில் கரூர் சம்பவத்தின் போது தொடண்டர்கள் அங்கிருந்த மரங்கள், கட்டவுட்கள், மின் கம்பங்களில் ஏறியதால் இந்த முறை விபரீதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க காவல்துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகைளை மேற்கொண்டு வருகின்றனர்.
தவெக தொண்டர்கள் பேனர் மீது ஏறாமல் இருக்க பிளக்ஸ்க்கு கீழே இரும்பு தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் அனுமதிக்கப்பட்ட வழியைத்தவிர மற்ற வழிகளில் தொண்டர்கள் நுழையாமல் இருக்க முள் கம்பிகள் கொண்டு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதன் ஒரு பகுதியாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்திற்கு வருகை தரும் தொண்டர்கள் மரத்தில் ஏறாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் துறையினர் மரத்திற்கு மரம் பாதுகாப்பு அளித்துள்ளனர்.
