கரூரில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட மக்கள் சந்திப்பு கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 6 காவலர்கள் சிபிஐ அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராகினர்.
கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. கூட்டத்தில் விஜய் பேசிக்கொண்டிருந்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 41 நபர்கள் உயிரிழந்தனர்.100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.இந்த வழக்கை விசாரிக்க மாநில அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்தது. சென்னை உயர்நீதிமன்றம் ஐ.ஜி அஸ்ராகார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தவெக தொடர்ந்த வழக்கில் அஜய் ரஸ்தோகி கண்காணிப்பின் கீழ் மேற்பார்வையின் கீழ் சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக சிபிஐ அதிகாரிகள் மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், நகர துணை கண்காணிப்பாளர், நகர காவல் ஆய்வாளர் மற்றும் வேலுச்சாமிபுரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், வணிக நிறுவன உரிமையாளர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் தவெக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அதைத்தொடர்ந்து இந்த சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தின் உறவினர்கள், பாதிக்கப்பட்ட நபர்கள் உட்பட பலரிடமும் பல்வேறு கட்ட விசாரணை நடைபெற்றுள்ளது.
தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கட்ட விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இன்று (டிசம்பர் 23) தான்தோன்றிமலை பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் தற்காலிக சிபிஐ அலுவலகத்திற்கு சம்பவம் நடைபெற்ற போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒரு காவல் உதவி ஆய்வாளர், நான்கு காவலர்கள், ஒரு ஊர்க்காவல் படை காவலர் என மொத்தம் 6 காவலர்கள் இன்று விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர். அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
