போன் போட்ட புஸ்ஸி ஆனந்த் : எடுக்காத விஜய்… என்ன நடக்கிறது தவெகவில்?

Published On:

| By Kavi

விஜய்  கட்சி மாநாட்டுக்கு செல்வதற்காக அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் 300க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு முன்பணம் கொடுத்து, கூடுதலாக வாகனங்களை அமர்த்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வரும் நிலையிலும் விஜய் ஆதரவாளர்கள் மாநாட்டுக்கு செல்ல தயாராகி வருகிறார்கள்.

ADVERTISEMENT

ஆனால் விக்கிரவாண்டியில் மாநாட்டு பணிகள் மந்தமாக நடந்து வருகிறது.

மாநாட்டுக்கு பாதுகாப்பு கொடுக்கவும், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவதற்குமான விழுப்புரம் மாவட்ட காவல்துறையினர் விக்கிரவாண்டியில் நடைபெறும் மாநாட்டு பணிகளை நேரடியாக சென்று ஆய்வு செய்தனர்.

ADVERTISEMENT

அப்போது மாநாட்டுக்கு பிரதானமானது பார்க்கிங் வசதிதான். ஆனால் அதற்கான வேலைகளை கொஞ்சம் கூட செய்யாமல் இருந்ததை பார்த்த போலீசார், மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர்.

இதையடுத்து உயரதிகாரிகளின் அறிவுறுத்தல்படி, விக்கிரவாண்டி டிஎஸ்பி நந்தகுமார் தவெக நிர்வாகிகளை அழைத்து, 5க்கும் மேற்பட்ட கேள்விகள் அடங்கிய நோட்டீஸ் கொடுத்து பதில் கேட்டுள்ளார்.

ADVERTISEMENT

அதில், பார்க்கிங்கிற்கு நீங்கள் தேர்வு செய்யப்பட்ட இடங்கள் என்ன? பார்க்கிங்கிற்கு கார்கள் சென்று வர சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதா? மழை காலம் என்பதால் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்ப இடம் சீர் செய்யப்பட்டு மேடுபடுத்தப்பட்டுள்ளதா?புட் கோர்ட் எவ்வாறு, எங்கெங்கே அமைக்கப்படவுள்ளது? உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி, இதற்கான பதிலை எழுத்துப்பூர்வமாக கேட்டுள்ளார்.

இந்த நோட்டீஸை விக்கிரவாண்டி தொகுதி பொறுப்பாளர் சக்திவேல் பெற்றுக்கொண்டு பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கவனத்துக்கு கொண்டுச்சென்றார்.

“இதுபற்றி விஜய்க்கு தகவல் தெரிவிக்க புஸ்ஸி ஆனந்த் அவரை தொடர்புகொண்டபோது  அவர் போனை எடுக்கவில்லை.  அதனால் காவல்துறைக்கு பதில் அளிக்க காலதாமதம் ஆகி வருகிறது” என்கிறார்கள் விக்கிரவாண்டி தவெகவினர்.

தவெகவுக்கு அனுப்பிய நோட்டீஸ் தொடர்பாக விக்கிரவாண்டி டிஎஸ்பி நந்தகுமாரை மின்னம்பலம் சார்பில் தொடர்புகொண்டு, மாநாடு பணிகள் பற்றியும், தவெகவுக்கு போலீஸ் கொடுத்த நோட்டீஸ் குறித்தும் கேட்டோம்.

“தவெக மாநாட்டுக்கு ஒன்றரை லட்சம் பேர் வருவதாக சொல்கிறார்கள். வரக்கூடிய வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கு போதுமான இடங்களை தேர்வு செய்திருக்கிறார்களா? உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி நோட்டீஸ் கொடுத்திருக்கிறோம். ஆனால் இதுவரை பதில் இல்லை. அவர்கள் பதிலை பொறுத்து உயரதிகாரிகள் முடிவு செய்வார்கள். அதேசமயம் தவெக மாநாட்டுக்கு  பாதுகாப்பு கொடுப்பதற்கான திட்டத்தையும்  உயரதிகாரிகள் வகுத்துள்ளனர்” என்றார்.

தவெக முக்கிய நிர்வாகிகளிடம் விசாரித்தபோது, “மாநாட்டு வேலைகள் சுணக்கமாக இருப்பதற்கு, கார் பார்க்கிங்கிற்கு மண் அடிக்கக் கூட போதுமான நிதி இல்லை” என்கிறார்கள்.

“இந்த மாநாடு பணிகள் மந்தமாக இருப்பதற்கு தாராளமாக செலவு செய்ய என் கையில் பணம் இல்லை. எதற்கெடுத்தாலும் மேலிடத்தையே எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது என்று புஸ்ஸி ஆனந்த தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பி வருகிறார்” என்கிறார்கள் தவெக வட்டாரத்தில்.

இதுபற்றி விளக்கம் கேட்க தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்தின் இரண்டு கைபேசி எண்களுக்கும் தொடர்புகொண்டோம். அவர் நமது அழைப்பை எடுக்கவில்லை.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

வணங்காமுடி

தேடி போனதால் கிடைத்த வாய்ப்பு… வெற்றிமாறன் கதையில் ஜெயம் ரவி

மழைக்குமாடா ரிவ்யூ பண்றீங்க… அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share