காதல் விவகாரம்… இளைஞர் வெட்டிக் கொலை: தீவிர விசாரணை!

Published On:

| By Monisha

manslaughter in thirunelveli

நெல்லையில் காதல் விவகாரத்தில் இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே அப்புவிளை சுவாமிதாஸ் நகரை சேர்ந்த 19 வயது இளைஞர் முத்தையா. இவர் சங்கனான் குளத்தில் திருமண அழைப்பிதழ் தயார் செய்யும் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

ADVERTISEMENT

அவர் கம்பெனியில் தன்னுடன் பணிபுரிந்து வரும் நெல்லை மாவட்டம் இட்டமொழி ஊரைச் சேர்ந்த சுதா என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் சுதாவின் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

ADVERTISEMENT

எதிர்ப்பையும் மீறி நேற்று (ஜூலை 24) ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளன்று மதியம் 2:30 மணிக்கு அப்புவிளை சாமிதாஸ் நகரில் உள்ள முத்தையாவின் வீட்டிற்கு சென்று அவரை நேரில் சந்தித்துள்ளார் சுதா.

பின்னர் மாலை 4:30 மணி அளவில் தனது இருசக்கர வாகனத்தில் சுதாவை இட்டமொழியில் கொண்டு வந்து விட்டு திசையன்விளை திரும்பியுள்ளார்.

ADVERTISEMENT

இதனையடுத்து இரவு 8 மணியளவில் செல்போனில் பேசிக் கொண்டே தனது நண்பரை பார்த்து விட்டு வருவதாக வெளியே சென்றுள்ளார்.

ஆனால் இரவு 9.30 மணியாகியும் முத்தையா வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் முத்தையாவின் சகோதரர்கள் வீட்டிற்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் தேடி சென்றனர்.

அப்போது காரம்பாடு ஓடை பகுதியின் ஓரத்தில் முத்தையா கழுத்து, வயிறு மற்றும் முதுகு பகுதிகளில் கத்திக்குத்துடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இதனைக் கண்ட முத்தையாவின் சகோதரர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து  அறிந்த திசையன்விளை காவல்துறையினர் முத்தையாவின் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரிக்கு உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் நெல்லை எஸ்.பி சிலம்பரசன், வள்ளியூர் டிஎஸ்பி யோகேஷ் குமார் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குறிப்பாக சுதாவின் உறவினர் வீடுகள் அமைந்துள்ள இட்டமொழி, படப்பார்குளம் பகுதிகளில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மோப்ப நாய் உதவியுடன் கொலை சம்பவம் நடைபெற்ற காரம்பாடு பகுதியிலும் காவல்துறையினர் துப்பு துலக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் காதலித்து வந்ததால் தற்போது ஆணவக்கொலை நடந்துள்ளதை அடுத்து இரு தரப்புக்கும் இடையே அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமலிருக்க திசையன்விளை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சரவணன் (நெல்லை)

“ரூ.1000 திட்டம் – சிலரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை” : ஸ்டாலின் பேச்சு!

மிக கனமழை: எந்தெந்த மாவட்டங்களில்?

அவதூறு பேச்சு: விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் கலிவரதன் கைது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share