பிரபல ரவுடியான ஐகோர்ட் மகாராஜாவை சென்னையில் போலீசார் இன்று (மார்ச் 21) துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். Police hunting down rowdy maharaja at chennai
கடந்த வாரம் சென்னை வேளச்சேரியை அடுத்த ஆதம்பாக்கம் அருகே நகைக்கடை அதிபரை கடத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல ரவுடி மகாராஜாவை போலீசார் தேடி வந்தனர்.
நெல்லை மார்க்கெட் பகுதியில் பதுங்கியிருந்த அவரை சுற்றிவளைத்த தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். அங்கிருந்து வேன் மூலம் சென்னைக்கு இன்று அதிகாலை அழைத்து வரப்பட்டார்.
கிண்டி அருகே வாகனம் வந்தபோது, கிண்டி ரேஸ் கோர்ஸ் பகுதியில் தனது இருச்சக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து அப்பகுதிக்கு போலீசார் அழைத்து சென்றபோது, பைக்கில் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் போலீசார் நோக்கி சுட்டு தப்பி ஓட முயன்றுள்ளார்.
அதற்குள் அங்கிருந்த உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் உடனடியாக சுதாரித்து, தப்பியோடிய மகாராஜாவின் வலதுகாலில் சுட்டு பிடித்து பிடித்தார். அவரிடமிருந்த நாட்டு துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.
காலில் குண்டடிப்பட்ட மகாராஜா தற்போது ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை முடிந்ததும் அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சித்திரப்பாடியில் தப்பியோட முயன்ற கொள்ளையனை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இந்நிலையில் இன்று சென்னையில் ரவுடியை போலீசார் சுட்டு பிடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.