Mansoor alikhan in Trisha controversy
நடிகை த்ரிஷா விவகாரத்தில் நேரில் ஆஜராக மன்சூர் அலிகானுக்கு சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையம் ஒரு நாள் அவகாசம் வழங்கியுள்ளது.
நடிகர் மன்சூர் அலிகான் கடந்த வாரம் அளித்த பேட்டி ஒன்றில் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதற்கு த்ரிஷா கண்டனம் தெரிவித்திருந்தார்.
மேலும் திரைப்பிரபலங்கள், நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலையம் மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து இன்று (நவம்பர் 23) நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மன்சூர் அலிகான் வீட்டிற்கு நேரில் சென்ற போலீசார் அவர் வீட்டில் இல்லாததால் அவரது மனைவியிடம் சம்மனை கொடுத்தனர். இதனிடையே மன்சூர் அலிகான் தலைமறைவாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் விசாரணைக்காக காவல் நிலையத்தில் ஆஜராக ஒரு நாள் அவகாசம் கேட்டு மன்சூர் அலிகான் கடிதம் மூலம் கேட்டிருந்தார்.

அந்த கடிதத்தில், “நடிகை த்ரிஷா குறித்து எனது அரசியல் பேட்டியின் இடையே நான் குறிப்பிட, அது குறித்து அவர் கவலை தெரிவிக்க,
தேசிய மகளிர் ஆணையத்தின் வேண்டுகோளை ஏற்று தாங்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணைக்காக என்னை அழைத்தீர்கள்.
கடந்த 15 நாட்களாக தொடர் இருமல் இருந்து வந்த நிலையில் நேற்று மிகவும் பாதிப்படைந்து பேசுவதற்கு மிக சிரமமாக இருப்பதால் நான் மருத்துவ சிகிச்சையில் இருந்து மீண்டு நாளை நீங்கள் குறிப்பிடும் நேரத்தில் விசாரணைக்கு ஆஜராகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மன்சூர் அலிகானின் கோரிக்கையை ஏற்று நாளை காலை 9 மணிக்கு ஆஜராக ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
இதனிடையே மன்சூர் அலிகான் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. Mansoor alikhan in Trisha controversy
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா









