கேரளாவிலிருந்து திருநெல்வேலிக்கு மருத்துவக் கழிவுகள் கொண்டுவந்த லாரி ஒன்று இன்றும் (டிசம்பர் 21) பிடிபட்டது. பிடிபட்ட சேலத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர், டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளாவில் இருந்து நெல்லை. தென்காசி மாவட்டங்களில் லாரி லாரியாக இறைச்சி கழிவுகள், மருத்துவக் கழிவுகள் குப்பைகளை மூட்டைகளில் கொண்டு வந்து கொட்டுவதை பல ஆண்டு காலமாக வாடிக்கையாக வைத்துள்ளனர்.
அதே போல, கோவை மாவட்டத்திலும் அவ்வப்போது கேரள கழிவுகள் கொட்டப்படுகின்றன. நாகர்கோவில் வழியாக வரும் மூட்டைகளை ராதாபுரம், பணகுடி, நாங்குநேரி வட்டாரங்களில் கொட்டப்படுகின்றன. தென்காசி வழியே வரும் லாரிகளில் மருத்துவக் கழிவுகளை கடையம், ஆலங்குளம் பகுதிகளில் கொட்டியுள்ளனர்.
சமீபத்தில் நெல்லை மாவட்டம் நடுக்கல்லூர், பழவூர் பகுதியில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களில் கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவக் கழிவுகள் மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டு கிடந்தன.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாவட்ட கலெக்டர் எச்சரித்து இருந்தார்.
சர்ச்சை வெடித்ததையடுத்து, கேரளா அரசே இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று 3 நாட்களுக்குள் குப்பைகளை அகற்ற வேண்டும்’ என தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இதனால், தமிழகம் கேரளாவின் குப்பைக்கிடங்காவது தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு, நிரந்தர முடிவு கிடைத்ததாக கருதப்பட்டது.
ஆனால், இன்றும் (டிசம்பர் 21 ) கேரளாவிலிருந்து திருநெல்வேலிக்கு மருத்துவக் கழிவுகள் கொண்டுவந்த லாரி சி.சி.டி.வி., காட்சிகள் கொண்டு பிடிபட்டது. தொடர்ந்து, லாரி பறிமுதல் செய்யப்பட்டதோடு, சேலத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர், டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதோடு, தமிழகத்தை சேர்ந்தவர்கள்தான் பணத்துக்கு ஆசைப்பட்டு கொண்டு கேரளாவில் இருந்து மருத்துவக்கழிவுகளை தங்கள் வாகனங்களில் ஏற்றி வந்து தமிழகத்தில் கொட்டுகின்றனர்.
தமிழக கேரள எல்லையில் செக்போஸ்டுகள் உள்ளன. அங்குள்ள அதிகாரிகள் இந்த வாகனங்களை பரிசோதிப்பதில்லையா? அல்லது பணத்தை வாங்கிக் கொண்டு அனுமதிக்கிறார்களா? என்றும் கேள்வி எழுந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
காட்டுக்குள் நின்ற காருக்குள் 52 கிலோ தங்கம், 9 கோடி கேஷ்… அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்!
Comments are closed.