சென்னை அடுத்த தாம்பரம் அருகே இன்று (ஆகஸ்ட் 1) அதிகாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார் நடத்திய என்கவுண்டரில் இரண்டு ரவுடிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சென்னை தாம்பரம் அடுத்த கூடுவாஞ்சேரி அருகே காரணை புதுச்சேரி சாலையில் இன்று அதிகாலை 3:30 மணி அளவில் காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அதிவேகமாக வந்த கருப்பு நிற காரை நிறுத்த முற்பட்டபோது அங்கு நிற்காமல் கார் உதவி ஆய்வாளரை இடிப்பது போல் வந்து, போலீஸ் ஜீப் மீது மோதி நின்றது.
அந்த காரின் அருகில் சென்ற போது உள்ளே இருந்த நான்கு பேர் ஆயுதங்களுடன் இறங்கி உதவி ஆய்வாளர் சிவகுருநாதனை அரிவாளால் தாக்கினர். இதனையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியாகினர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் என்கவுண்டர் செய்யப்பட்ட நபர்கள் பிரபல ரவுடிகளான சோட்டா வினோத் மற்றும் ரமேஷ் என்பது தெரியவந்தது.

நடந்தது என்ன?: காவல் அறிக்கை!
இதுதொடர்பாக காவல்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் “தாம்பரம் மாநகர காவல் கூடுவாஞ்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காரணை புதுச்சேரி அருங்கல் சாலையில் இன்று 01-08-2023 ஆம் தேதி அதிகாலை 03.30 மணியளவில் காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் மற்றும் காவலர்கள் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அதி வேகமாக வந்த கருப்பு நிற SKODA காரை நிறுத்த முற்பட்ட போது நிறுத்தாமல் உதவி ஆய்வாளரை இடிப்பது போல் வந்து போலிஸ் ஜீப் மீது மோதி நின்றது.
உடனடியாக கார் அருகில் சென்ற போது அதில் இருந்து நான்கு நபர்கள் ஆயுதங்களுடன் காரை விட்டு இறங்கி போலீசாரை நோக்கி தாக்க முற்பட்டனர்.
அதில் ஒருவர் அருவாளால் உதவி ஆய்வாளரின் இடது கையில் வெட்டினார். மீண்டும் தலையில் வெட்ட முற்பட்ட போது உதவி ஆய்வாளர் கீழே குனிந்ததால் அவரது தொப்பியில் வெட்டுபட்டது.
இதை பார்த்த காவல் ஆய்வாளர் ஒரு நபரையும், உதவி ஆய்வாளர் ஒரு நபரையும் சுட்டனர். மீதி இருவர் அங்கிருந்த ஆயுதங்களுடன் தப்பி ஓடினார்கள்.
மேற்படி காயம்பட்ட இருவரை பற்றி விசாரிக்க அதில் ஒருவர் பெயர் வினோத் (எ) சோட்டா வினோத். வயது 35, த/பெ. சுப்பிரமணி என்றும்,
அவர் ஓட்டேரி காவல் நிலைய சரித்திர பதிவேடு (A+ Category, HS.No.04/15) குற்றவாளி எனவும் அவர் மீது 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும்,
அதில் 10 கொலை, 15 கொலை முயற்சி. 10 கூட்டுக்கொள்ளை, 15 அடிதடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.
மற்றொரு நபர் பெயர் ரமேஸ். வயது 32. த/பெ. சுந்தரம் என்றும் அவர் ஓட்டேரி காவல் நிலைய சரித்திர பதிவேடு (A Category, H5.No.18/20) குற்றவாளி எனவும்,
அவர் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அதில் 5 கொலை, 7 கொலை முயற்சி, 8 அடிதடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.
மேற்படி காயம்பட்ட உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் என்பவர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார்.
காயம்பட்ட எதிரிகளை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த போது எதிரிகள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
WI vs IND: நீயா! நானா! ஒரு நாள் கோப்பை யாருக்கு?
நெம்மேலி குடிநீர்: மேலும் 9 லட்சம் பேர் பயனடைவார்கள் – சிவ்தாஸ் மீனா
