கடலூரில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டவரை போலீசார் என்கவுண்ட்டர் செய்தனர். police encountered mottai vijay
தமிழகத்தில் நாளுக்கு நாள் வழிப்பறி, கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் சென்னையில் ஒரே நாளில் 6 இடங்களில் செயின் பறிப்பு நடந்தது. இதில் ஈடுபட்ட இரானிய கொள்ளையன் ஜாபர் குலாம் என்கவுண்ட்டர் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் இன்று(ஏப்ரல் 2) அதிகாலை 2.30 மணியில் இருந்து 3.30 மணிக்குள் மூன்று இடங்களில் வழிப்பறி கொள்ளை நடந்தது.
எம்.புதூர் வழியாக தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த காளிமுத்து, கடலூர் டூ சிதம்பரம் வழியில் பெரியப்பட்டு சர்வீஸ் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த லாரி ஓட்டுநர்களான சீர்காழியைச் சேர்ந்த பிரபு, மணிமாறன் ஆகியோரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளை கும்பல் பணம், செல்போன்களை பறித்துவிட்டு தப்பித்துவிட்டது.
வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த வழிப்பறி குறித்து கடலூர் மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் விசாரித்து வந்தனர்.
இதில் சிதம்பரம் – கடலூர் சாலையில் கொள்ளையர்களை இன்று காலை போலீசார் பிடித்த போது, அதில் ஒருவன் போலீசாரை தாக்கிவிட்டு தப்பினான். அவனை துப்பாக்கி முனையில் தேடி வருவதாக போலீஸ் வட்டாரத்தில் கூறினர்.
இதுதொடர்பாக மின்னம்பலத்தில் அதிகாலை பயங்கரம்… ஒரே மணி நேரத்தில் மூன்று இடங்களில் வழிப்பறி! என்ற தலைப்பில் இன்று (ஏப்ரல் 2) காலை செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்தசூழலில் தப்பியோடிய கொள்ளையனான விஜய்யை இன்று பிற்பகல் போலீசார் என்கவுண்ட்டர் செய்தனர்.
இதுகுறித்து கடலூர் போலீஸ் வட்டாரத்தில் விசாரித்த போது, “புதுச்சேரி திலாஸ்பேட்டையில் முதல்வர் ரங்கசாமி வசிக்கும் இடத்திற்கு பக்கத்து தெருவைச் சேர்ந்த விஜய் என்கிற மொட்டை விஜய்(20), புதுச்சேரி உழவர் கரையைச் சேர்ந்த ரேவந்த்குமார்(21), அன்பரசு(20), திலாஸ்பேட்டை பீமாநகரைச் சேர்ந்த ஆகாஷ்(20), புதுச்சேரி திருபுவனையைச் சேர்ந்த ரியாஸ் அகமது(22) , விழுப்புரம் பில்லூரைச் சேர்ந்த விக்னேஷ்(17) ஆகிய 6 பேர்தான் இந்த வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டனர்
இவர்கள் கடலூர் – திருபாதிரிபுலியூர் காவல்நிலையம் எல்லைக்கு உட்பட்ட எம்.புதூர் புதிய பேருந்துநிலையம் பின்புறத்தில் இருக்கும் முந்திரி காட்டுப்பகுதியில் மறைந்திருந்தது தெரியவந்தது. இவர்களை பிடித்து வர, இன்ஸ்பெக்டர் சந்திரன், போலீசார் கணபதி மற்றும் கோபி ஆகிய மூவரும் அங்கு சென்றனர். அப்போது மொட்டை விஜய், போலீசார் கணபதி மற்றும் கோபியை தாக்க முயன்றான். அப்போது, தற்காப்புக்காக இன்ஸ்பெக்டர் சந்திரன் துப்பாக்கியால் மூன்று ரவுண்டுகள் சுட்டதில் சுருண்டு விழுந்த மொட்டை விஜய்யை மருத்துவமனைக்கு தூக்கி வந்தனர். ஆனால் அவன் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டான்” என்றனர்.
யார் இந்த மொட்டை விஜய்? police encountered mottai vijay
“புதுச்சேரி திலாஸ்பேட்டையைச் சேர்ந்த ஓடத்தெருவைச் சேர்ந்த இவனது தந்தை பெயர் கோபி. இவன் “டிவோ” பைக் பெயரில் ஒரு வாட்ஸப் குரூப் வைத்துள்ளான். இதில் புதுச்சேரி , விழுப்புரம், கடலூர், சென்னை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களை சேர்த்து வைத்திருந்தான். இந்த குரூப்பில் உள்ளவர்களுக்கு பைக் இல்லையென்றால் தவணை முறையில் பைக் வாங்கிக்கொடுத்து வந்துள்ளான்.

எங்கேயாவது, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட செல்ல வேண்டுமென்றால் இந்த குழுவில் தகவலை பகிர்ந்து, அதன்பிறகு ஒரு இடத்தில் கூடி வழிப்பறியில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர்.
முதலில் பைக் ஒன்றை திருடி, குற்றச்செயல்களில் ஈடுபட்ட மொட்டை விஜய் குறுகிய காலத்தில் சுமார் 40 பைக்குகளை திருடியிருக்கிறான். புதுச்சேரி எஸ்.எஸ்.பியாக கலைவாணன் பதவி ஏற்ற போது, பைக் திருட்டு லிஸ்ட்டை எடுத்து பார்த்ததில் விஜய் பெயர்தான் முதலிடத்தில் இருந்தது. அவனை புதுச்சேரி போலீசார் கைது செய்த போது பாத்ரூமில் வழுக்கி விழுந்து கை முறிவு ஏற்பட்டது.

சில நாட்கள் ஜெயிலில் இருந்த விஜய் மீண்டும் வெளியே வந்து மீண்டும் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தான். குறிப்பாக இரவு நேரங்களில் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருப்பவர்களிடம் வழிப்பறி செய்து வந்தான்.
இதனால் இவன் மீது, புதுச்சேரி டி நகர், ஆரோவில், மங்கலம், கோட்டக்குப்பம், மேட்டுபாளையம், கிளியனூர், வில்லியனூர், தவளக்குப்பம், சேதுராபட்டு, அரியன்குப்பம் ஆகிய காவல்நிலையங்களில் 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன” என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தில்.

இந்த என்கவுண்ட்டர் குறித்து கடலூர் எஸ்.பி ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்த வழிப்பறி கும்பலை பிடிக்க சென்ற போது புதரில் மறைந்திருந்து ஓடி வந்த விஜய் ஆயுதங்களால் போலீசாரை வெட்டினான். அப்போது இன்ஸ்பெக்டர் ஆயுதத்தை கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு கூறினார். ஆனால் அவன் கேட்கவில்லை. போலீசாரை அரிவாளால் வெட்டியதில் தற்காப்புக்காக சுட்டனர். இடுப்பில் ஒரு புல்லட்டும், நெஞ்சில் இரண்டு புல்லட்டும் பாய்ந்தது. மருத்துவமனை எடுத்துச் செல்லும் வழியில் இறந்துவிட்டான். தற்போது கணபதியும், கோபியும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விஜய் மீது புதுச்சேரியில் 22 வழக்குகள் உட்பட மொத்தம் 30 வழக்குகள் உள்ளன” என்று கூறினார்.

அடுத்தடுத்து என்கவுன்ட்டர்! police encountered mottai vijay
கடந்த மார்ச் 26ஆம் தேதி சென்னையில் ஒரே நாளில் 6 இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்ட இரானிய கொள்ளையன் ஜாபர் குலாம் என்கவுண்ட்டர் செய்யப்பட்டார்.
மதுரையில் வெள்ளக்காளி என்ற குற்றப்பின்னணி கொண்ட நபரின் நெருங்கிய கூட்டாளி சுபாஷ் சந்திர போஸ் கடந்த மார்ச் 31ஆம் தேதி என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டார்.
தற்போது கடலூரில் மொட்டை விஜய் என்கவுண்ட்டர் செய்யப்பட்டிருக்கிறார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் அடுத்தடுத்து போலீசார் என்கவுண்ட்டர் செய்வது தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. police encountered mottai vijay