ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து சரத்குமார் நேற்றிரவு மதுரையில் பேட்டி அளித்துள்ளார்.
மலையாள சினிமாவில் பாலியல் துன்புறுத்தல்கள் அதிகம் நடந்திருப்பதாக ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் நடிகை ராதிகா சரத்குமார் கேரளாவில் நடிகைகளின் கேரவனில் ரகசிய கேமரா வைக்கப்பட்டிருந்ததாக குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் நேற்று (செப்டம்பர் 4) இரவு மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகரும் பாஜகவைச் சேர்ந்தவருமான சரத்குமாரிடம், ஹேமா கமிட்டி மற்றும் ராதிகாவின் குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், இது சாதாரண விஷயம் கிடையாது. இதை ஏனோ, தானோவென சொல்லிவிட முடியாது. “ஹேமா கமிட்டி அறிக்கையில் உள்ள 281 பக்கங்களில் 160 பக்கங்களை நான் படித்துவிட்டேன். இந்த விவகாரம் குறித்து நாம் விரிவாக பேச வேண்டியுள்ளது.
அடிப்படை வசதிகள், கழிப்பறை வசதிகள் இல்லை என சொல்லியிருக்கின்றனர். பாலியல் துன்புறுத்தல்கள் இருக்கிறது, தனியறையில் கேமரா வைக்கிற அளவுக்கு நிலை இருக்கிறது என்று அந்த கமிட்டியின் அறிக்கையிலேயே சொல்லியிருக்கிறார்கள்.
என் மனைவி புதிதாக ஒன்றும் சொல்லவில்லை. தனியறைக்கு ஆடை மாற்றிக்கொள்ள செல்லும் போது அங்கு கேமரா இருக்குமோ என்ற அச்சம் வந்துவிடுகிறது என்று அந்த கமிட்டியின் அறிக்கையில் 38ஆவது பக்கத்தில் உள்ளது. நான் படித்தேன்.
சினிமா துறையில் மட்டுமின்றி காவல்துறை என பலதுறைகளிலும், ஏதோ ஒரு சூழ்நிலையில் இது நடக்கிறது. நிர்பயா கொலை, கொல்கத்தா சம்பவம் எனப் பெண்கள் மீதான அத்துமீறல் நாட்டில் எல்லா இடங்களிலும் நடக்கிறது. வங்கித்துறை, ஐடி துறையிலும் நடக்கிறது” என்று கூறினார்.
“எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவர் ஆவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே” என்ற எம்.ஜி.ஆர் பாடலை பாடிக் காட்டிய சரத்குமார், இதுபோன்ற விவகாரங்களில் மற்றவர்கள் என்ன செய்தனர் என யோசிப்பதைக் காட்டிலும், நம் மக்களை நாம் சீர்படுத்த வேண்டும் என்று கூறினார்.
கேரவனில் கேமரா வைத்தது குறித்து என் மனைவி பேசியதற்கு அப்போதே இதைச் சொல்லாமல் ஏன் இப்போது சொல்கிறார் என்று கேள்வி கேட்கிறார்கள். அனைவராலும் அப்போதே எல்லாவற்றையும் சொல்லிவிட முடியாது.
பாதிக்கப்பட்ட அனைவரும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே கேரளாவில் ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. என்னை பொறுத்தவரை பெண்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
பிக் பாஸ் நடிகை ஒருவர், ‘புகார் கொடுத்தால் ஏற்றுக்கொள்வதில்லை என்று உங்களிடம் சொன்னபோது, நீங்கள் உன்னை யார் புகார் கொடுக்க சொன்னார்’ என கேள்வி கேட்டதாக கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, நான் பிக் பாஸே பார்த்தது இல்லை. என்னிடம் யாரும் அப்படி சொன்னதில்லை. நான் நடிகர் சங்க உறுப்பினராக இல்லை. என்னிடம் ஏதாவது புகார் சொன்னால். அதை தள்ளிப்போட மாட்டேன். உடனடியாக பார்ப்பேன். நான் சாதாரண தலைவர் கிடையாது” என்று தெரிவித்தார்.
இதுபோன்று நடக்காமல் இருக்க உங்களது அறிவுரை என்ன என்ற கேள்விக்கு, அமெரிக்க அதிபர் வேட்பாளராக உள்ள ட்ரம்ப் மீதே இதே குற்றச்சாட்டு உள்ளது என்று குறிப்பிட்ட சரத்குமார். பெண்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் போது இந்த தவறுகள் நடக்காது என நினைக்கிறேன் என்று கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா