’உங்களுடன் ஸ்டாலின்’ மனுக்களை ஆற்றில் வீசியது யார்? போலீசார் விசாரணையில் சிக்கப் போகும் முக்கிய புள்ளி!

Published On:

| By vanangamudi

Police approach who threw 'ungaludan stalin' petitions into vaigai

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்கள் வைகை ஆற்றுப்பாலத்தின் கீழே இன்று (ஆகஸ்ட் 29) கண்டெடுக்கப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக திருப்புவனம் தாசில்தார் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

அரசு சேவைகளை மக்களின் இல்லங்களுக்கேச் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழகம் முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமை கடந்த ஜூலை 15ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மாநிலம் முழுவதும் இதுவரை சுமார் 4,600 முகாம்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த திட்டத்திற்கு பொதுமக்களிடமிருந்து அதிக அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 20, 21 ஆகிய தேதிகளில் மானாமதுரை, தேவகோட்டை, சாக்கோட்டை, சிவகங்கை, திருப்புவனம், பூவந்தி, கீழடி, மடப்புரம், ஏனாதி, நெல்முடிக்கரை ஆகிய பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

ADVERTISEMENT

அப்படி பெறப்பட்ட மனுக்கள் தான் இன்று அங்குள்ள வைகை ஆற்றுப்பாலத்தின் கீழே கொட்டி கிடந்ததை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முதல் பாமக தலைவர் அன்புமணி, தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று அவசர ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.

ADVERTISEMENT

இதில் தலைமைச் செயலாளர் முருகானந்தம், சிறப்பு திட்ட செயலாக்கத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும் காணொலி காட்சி வாயிலாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் கலந்துகொண்டனர்.

அப்போது அவர், மக்களிடம் வாங்கிய மனுக்கள் எப்படி ஆற்றில் கிடந்தது? இதுகுறித்த வீடியோக்கள் சமூகவலைதளங்களில் பரவிய நிலையில் ஆளும் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

மேலும், ”உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் மூலம் தமிழ்நாடு முழுவதும் இதுவரைக்கும் 11.50 இலட்சம் மனுக்கள் வந்திருக்கின்றன. இந்த மனுக்களையெல்லாம் காகிதமாக பார்க்காமல், பொதுமக்களுடைய வாழ்க்கையாக, தனிமனிதனுடைய வாழ்க்கையாக நீங்கள் அனைவரும் பார்க்க வேண்டும்.

மேலும் திமுக அரசை நம்பி பொதுமக்கள் வைக்கக்கூடிய கோரிக்கைகளை நாம் முடிந்த அளவிற்கு வெகு விரைவாக அதை தீர்த்து வைக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக தலைமை செயலக அதிகாரிகள், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடியை தொடர்பு கொண்டு கடுமையாக கண்டித்துள்ளனர்.

ஆட்சியர் பொற்கொடி, திருப்புவனம் தாசில்தார் விஜயகுமாரை மனுக்கள் எப்படி ஆற்றில் வீசப்பட்டது தொடர்பாக போனில் விவரம் கேட்டறிந்தார். பின்னர் நேரிலும் அழைத்து விசாரித்துள்ளார்.

அதற்கு தாசில்தார், “உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியில் மனுக்களை பெற்று அந்தந்த சந்தம்பட்ட துறைகளுக்கு பிரித்து கொடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி பட்டா, சாலை வசதி, வீடு வேண்டி அளிக்கப்பட்ட வருவாய் துறையை சேர்ந்த மனுக்களை துணை வட்டாட்சியர் பரிசீலனை செய்து எனக்கு அனுப்பி வைத்தார்.

அந்த மனுக்களை எனது அறையில் உள்ள மேஜையில் தான் வைத்திருந்தேன். அதுதான் அலுவலகத்தில் உள்ள ஊழியர்காள் உதவியுடன் வெளியே எடுத்து செல்லப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து ஆட்சியர் அறிவுறுத்தலின் பேரில் தாசில்தார் விஜயகுமார் திருப்புவனம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரை போலீசார் சீரியஸாக எடுத்துக்கொண்டு ஆற்றில் கிடந்த மனுக்களை முதலில் பார்த்தது யார்? போட்டோ, வீடியோ எடுத்தது யார் என்று படிபடியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக நாம் காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, ”இங்குள்ள சேர்மன் தேங்காய் மாறனும், பலம் வாய்ந்த தமிழ் மாநில காங்கிரஸை சேர்ந்த அயோத்தியும் எப்போதும் எலியும் பூனையுமாக இருப்பார்கள்.

இருவருக்கும் அரசுத்துறைகளில் ஆட்கள் இருக்கின்றனர். அவர்கள் மூலம் அலுவலகத்தில் உள்ள ரகசியங்களை வெளியிட்டு ஒருவர் மற்றவரை சிக்கலுக்கு உள்ளாக்குவார்கள்.

இதுவும் அப்படிதான். இந்த மனுக்களில் அதிகமாக சேர்மன் தேங்காய் மாறனுக்கு வேண்டியப்பட்டவர்களின் மனுக்கள் இருந்தது. இதனால் தான் அவருக்கு எதிரான ஆட்கள், வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் உதவியுடன் இந்த மனுக்களை எடுத்திருக்கலாம்“ என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share