முதுபெரும் கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தி உள்ளனர்.

கவிஞர் ஈரோடு தமிழன்பன் (வயது 92) உடல் நலக் குறைவால் சென்னையில் இன்று நவம்பர் 22-ந் தேதி காலமானார். ஈரோடு தமிழன்பன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின்: மரபுக்கவிதை, புதுக்கவிதை என இரண்டிலும் சிறந்து, தமிழுக்கு வளம் சேர்த்த கவிஞர் ஈரோடு தமிழன்பன் என்கிற திரு. ந. செகதீசன் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். கவிஞர் ஈரோடு தமிழன்பனை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், தமிழன்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்: தமிழ் இலக்கியத்துக்கு அளவிட முடியா பங்களிப்பைச் செய்த பெருமதிப்பிற்குரிய கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவுச் செய்தி அறிந்து வருத்தமுற்றேன். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் முதல் மகா கவிஞர் பாப்லோ நெரூதா வரை தனது இலக்கியச் சிறகை விரித்தவர். முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நேசிப்புக்குரிய எழுத்துலக நண்பர். மரபுக் கவிஞராய் தொடங்கி புதுக்கவிதையிலும் புதிய அலைகளை ஏற்படுத்திய படைப்பாளி. ‘வணக்கம் வள்ளுவ’ நூலுக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்ற கவிஞர் தமிழன்பன் அவர்கள், திராவிட இயக்கத்தின் மீது அசைக்க முடியாத பற்றுக் கொண்டிருந்தார். ஈரோடு தமிழன்பன் மறைவு, இலக்கிய உலகத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவுக்கு இரங்கலையும், அவரது குடும்பத்தினர் – நண்பர்கள் – வாசகர்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி: ஈரோட்டுப் பாதையை தன் பெயரில் மட்டுமல்ல கொள்கை வழியாகவும் வரித்துக்கொண்டவர் கவிஞர் ஈரோடு தமிழன்பன்.தமிழ் புதுக் கவிதை உலகின் ஆகப்பெரும் சொத்தாகத் திகழ்ந்து, இன்று அவர் காலத்தோடு நிறைந்தார் என்ற செய்தி பெரும் துயரத்தை அளிக்கிறது. ந.செகதீசன் எனும் இயற்பெயர்கொண்ட ஈரோடு தமிழன்பன் என்மீது நீங்காத அன்பு கொண்டவர். எனது அனைத்து புத்தக வெளியீட்டு நிகழ்வுகளிலும் பங்கேற்று என்னை ஊக்கப் படுத்திச் சிறப்பித்தவர். அவரது ‘அந்த நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம்’ நூல் மறக்க முடியாத அதிர்வலைகளை ஏற்படுத்திய ஒன்று. ‘கீழடியில் கேட்ட தாலாட்டுகள்’ நூல் முதல்வரால் 2022-ல் வெளியிடப்பட்டது. சாகித்ய அகாதமி விருது பெற்ற இவரின் ‘வணக்கம் வள்ளுவ’ நூல் பல கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது. அந்த நூல் குறித்து புதுக் கல்லூரியில் நான் விரிவான உரையாற்றியது நிழலாடுகின்றது. பேராசிரியராக , சென்னைத் தொலைக்காட்சி நிலைய செய்தி வாசிப்பாளராக, தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்ற நிர்வாகக் குழு உறுப்பினராக, அறிவியல் தமிழ் மன்றத்தின் உறுப்பினராகப் பன்முகம்கொண்டு விளங்கிய அய்யா ஈரோடு தமிழன்பன் தனது 92-ம் வயதில் மீளாத் துயில் கொண்டிருக்கிறார். அவரின் வாசகர்கள், நண்பர்கள், குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் ! அவரது கரகரத்த அன்புக் குரல் இனி அவர்தம் படைப்புகள் வழி நம்மோடு உறவாடும்!
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை: தமிழ் இலக்கிய உலகின் பன்முகப் பெருமகனான கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் காலமான செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். சிறந்த ஆசிரியர், மரபுக் கவிஞர், புதுக்கவிதைக் கவிஞர், சிறுகதை ஆசிரியர், புதின ஆசிரியர், நாடக ஆசிரியர், சிறார் இலக்கியப் படைப்பாளர், வாழ்க்கை வரலாற்றாசிரியர், திறனாய்வாளர், ஓவியர், சொற்பொழிவாளர், திரைப்படப் பாடலாசிரியர், திரைப்பட இயக்குநர் என எண்ணற்ற துறைகளில் தடம் பதித்த பன்முக ஆளுமை. சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியதுடன், தமிழ்நாடு அரசின் இயல் இசை நாடக மன்ற நிர்வாகக் குழு உறுப்பினர், அறிவியல் தமிழ் மன்ற உறுப்பினர் ஆகிய பொறுப்புகளிலும் விளங்கினார். தமிழ் மரபுக்கவிதை மற்றும் புதுக்கவிதை இரண்டிலும் தனித்துவமான பாணி. சங்கத்தமிழின் பாரம்பரியத்தையும் நவீன உணர்வுகளையும் இணைக்கும் சிந்தனைகள் அனைவராலும் போற்றப்படும். அவரது சிறப்பான படைப்புகளில் ஒன்றான ‘வணக்கம் வள்ளுவா’ நூலுக்காக 2004 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. வானம்பாடி கவிதை இயக்கத்தின் முக்கியப் பங்களிப்பாளர். ‘அரிமா நோக்கு’ ஆய்விதழின் ஆசிரியராகவும் சேவையாற்றியவர். அவரது படைப்புகள் அனைத்தும் தமிழ் வாசகர்கள் மனதில் அழியாத இடத்தைப் பெற்றன. தமிழ் இலக்கியத்திற்கும் சமூக சிந்தனைகளுக்கும் அளித்த பங்களிப்புகள் சொல்ல முடியாதவை. அவரது மறைவு தமிழ் உலகிற்கு ஒரு பெரிய இழப்பு. ஈரோடு தமிழன்பன் அவர்களின் குடும்பத்தினருக்கும், அவரை நேசித்த அனைத்து எழுத்தாளர்கள், வாசகர்கள், கலைஞர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன்: ஈரோடு தமிழன்பன் அவர்கள்
நாடறிந்த நல்ல தமிழ் கவிஞர்..
ஏடறிந்த ஏற்றமிகு புலவர்…!
பாடறிந்த மொழி காத்த
தமிழ் அறிஞர்…!
விடைபெற்றார் இன்றே…!
கவிஞருக்கு ஏது மரணம்..?
மரணமில்லா பெருவாழ்வு
வாழ்க! நீவீர்..!
அருள்மொழி (திராவிடர் கழகம்):
‘ தந்தை தோழரும்’ மறைந்தார்!!
மாகவி ஈரோடு தமிழன்பன் அவர்கள்
காலமாகி நிறைந்துவிட்டார்..
வேப்ப மரம் முதல் எருக்கஞ்செடிவரை
எதை வெட்டினாலும்
கண்ணீர் சொரியும் கவிதை விரல்கள்
இனி வள்ளுவன் எழுதாத
எட்டாவது சீரோடு அவர் வீட்டு வாசலில்
புரண்டு அழுவதைப் பார்க்கலாம்.
தங்களுக்காக வள்ளுவனிடம் வாதாடிய
மனிதநேயனைத் தேடிவரும் ‘ வரைவின் மகளிர் ‘’ இனி எந்த இலக்கியத் தந்தையிடம் போய் முறையிடுவார்கள்?
ஆற்ற முடியாத அம்மாவின் இழப்பையும்
அன்புத் தம்பிகளின் துயரத்தையும்
ஆற்றுப்படுத்தும் சொற்களையும்
எழுதிவிட்டீர்களா அய்யா !!
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: தமிழ் இலக்கிய உலகில் ஒளிர்ந்த நட்சத்திரம் ஈரோடு தமிழன்பன் அவர்கள் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சென்னிமலையில் பிறந்த ந.ஜெகதீசன், கல்லூரியில் படிக்கிற நாள்களிலேயே தமிழன்பன் எனும் புனைபெயரில் கவிதைகளை எழுதினார்.
டாக்டர் கலைஞர் அவர்களின் தலைமையிலான கவியரங்கில் அவர் பங்கேற்ற போது, ‘ஈரோடு தமிழன்பன்’ என கலைஞர் அழைக்கவே, அதுவே பின்னாளில் பெயராக நிலைத்தது.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் கவிதைகளால் ஈர்க்கப்பட்டு அவர் மீது பற்று கொண்டார்.
கல்லூரியின் இளங்கோ மன்ற ஆண்டு விழாவிற்குத் தலைமையேற்க, பாவேந்தரை அழைத்து வந்தார் தமிழன்பன்.
பாரதிதாசனின் கவிதைகள் மீதான ஈர்ப்பும், அவருடனான நட்பும் தமிழன்பனுக்குப் பெரும் ஊக்கத்தை வழங்கின. கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு புரட்சிக் கவிஞரோடு பத்தாண்டுக் காலம் உடன் பயணித்தார். தமிழன்பனின் ‘நெஞ்சின் அலைகள்’ நாவலின் கையெழுத்துப் பிரதியை வாசித்த பாரதிதாசன், அதனை நூலாக்க உதவினார். பாரதிதாசன் மறைவுக்குப் பிறகு 1965இல் அந்த நாவல் வெளிவந்தது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியையும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலைப் பட்டத்தையும், முனைவர் பட்டத்தையும் பெற்றார். மரபுக் கவிதைகளை எழுதிக்கொண்டிருந்த தமிழன்பன், புதுக்கவிதையின் பக்கமாகத் தன் கவனத்தைத் திருப்பினார்.
தமிழ்க் கவிதைப் பரப்பில், முன்னை மரபுக்கும் பின்னை புதுமைக்கும் பாலமாக இருந்து தமிழ் இலக்கிய உலகில் சிகரம் தொட்டவர்.
சென்னை புதுக்கல்லூரி தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற தமிழன்பன், முன்பே ‘பொதிகை தொலைக்காட்சி’யில் பகுதிநேர செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றினார்.
கவிதை, நாவல் எழுதியதோடு சிறுகதை, நாடகம், சிறார் இலக்கியம், வாழ்க்கை வரலாறு, திறனாய்வு, மொழிபெயர்ப்பு எனப் பல வகைமைகளிலும் 100-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இந்தி, வங்காளம், மலையாளம், ஆங்கிலம், உருது உள்ளிட்ட பல மொழிகளிலும் அவரது கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
நிறவெறிக்கு எதிராகப் போராடிய ஆப்பிரிக்க – அமெரிக்கத் தலைவரான மார்ட்டின் லூதர் கிங் வாழ்க்கையைக் கவிதை வடிவில், ‘காலத்தால் மறையாத கருப்புச் சூரியன்’ எனும் நூலாக எழுதினார் தமிழன்பன்.
தமிழ் இன உணர்வும் தன்மான உணர்வும் ஈரோடு தமிழன்பன் அவர்களை திராவிட இயக்கத்தின் இலட்சியக் கவிஞர்கள் வரிசையில் இடம்பெறச் செய்தது.
“வணக்கம் வள்ளுவ“ என்ற நூலுக்காக சாகித்திய அகாதமி விருது பெற்ற ஈரோடு தமிழன்பன், தமிழ் மொழிக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் ஆற்றிய அருந்தொண்டு என்றென்றும் நிலைத்து நிற்கும்.
ஈரோடு தமிழன்பன் அவர்கள் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் இலக்கிய ஆர்வலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
