பெரம்பலூரைச் சேர்ந்த டேக்வாண்டோ பயிற்சியாளர் மீது பொய்யான புகார் அளிக்கப்பட்டிருக்கிறது என தெரியவந்ததை தொடர்ந்து அவர் மீதான போக்சோ வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
தமிழ்நாடு பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் டேக்வாண்டோ பயிற்சியாளராக பணியாற்றி வந்தவர் தர்மராஜன். இவர், விளையாட்டு விடுதியில் தங்கி, டேக்வாண்டோ பயிற்சி அளித்து வந்தார்.
தர்மராஜன் தன்னிடம் பயிற்சிக்கு வரும் மாணவிகளிடம் ஆபாசமாக பேசுவதாகவும், பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாகவும் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2022 டிசம்பரில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு பெரம்பலூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இதனை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் தர்மராஜன்.
இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். தர்மராஜன் மீது புகார் கொடுத்த மூன்று மாணவிகளின் வாக்குமூலத்தை படித்து பார்த்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அந்த மூன்று மாணவிகளும் தங்களது பெற்றோர்களுடன் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார்.
இந்த வழக்கு கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு அந்த மூன்று மாணவிகள் ஆஜரானார்கள்.
நீதிபதி அறையில் வைத்து ‘164 வாக்குமூலம்’ பெறப்பட்டது. அப்போது அவர்கள், “பயிற்சியாளர் தர்மராஜன் எங்களுக்கு எந்தவித பாலியல் தொந்தரவும் கொடுக்கவில்லை. எந்த பெண்களிடமும் அவர் தவறாக நடந்துகொள்ளவில்லை. பிரதீப், அரவிந்தன் ஆகிய இருவரின் தூண்டுதலின் பேரில் நாங்கள் இந்த புகாரைக் கொடுக்க நிர்பந்திக்கப்பட்டோம். ஒரு வெள்ளை காகிதத்தில் எங்களிடம் கையெழுத்து பெற்றுக் கொண்டனர். அதில் என்ன எழுதி கொடுத்தார்கள் என்று எங்களுக்கு தெரியாது” என்று வாக்குமூலம் கொடுத்தனர்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பயிற்சியாளர் தர்மராஜன் மீதான வழக்கை ரத்து செய்தார். மேலும், இதுபோன்று பொய் புகார் கொடுக்க தூண்டிய அரவிந்தன், பிரதீப் மீது போக்சோ சட்டப்பிரிவு 22-ன் கீழ் நான்கு வாரத்துக்குள் வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
அதுபோன்று தர்மராஜன் எந்த தவறும் செய்யவில்லை என்று சொன்ன மூன்று மாணவிகளுக்கும் நீதிபதி வாழ்த்து தெரிவித்தார்.
இதுதொடர்பாக நாம் தர்மராஜனை தொடர்பு கொண்டு பேசினோம்.
“எனது சொந்த ஊர் விருத்தாசலம். நான் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர். விளையாட்டு மீதான ஆர்வம் காரணமாக பெங்களூருவில் டேக்வாண்டோ பயிற்சிக்கு டிப்ளமோ முடித்தேன்.
அதன்பிறகு தமிழ்நாடு பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பகுதி நேர பயிற்சியாளராக 2016 முதல் பணியாற்றி வந்தேன். 2019ஆம் ஆண்டு சாய் எனப்படும் இந்திய விளையாட்டு ஆணையத்தில் ஒப்பந்த அடிப்படையில் எனக்கு வேலை கிடைத்தது.
ஆனால் தமிழ்நாட்டு மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தால், நான் அந்த வேலைக்கு செல்லவில்லை.
இந்நிலையில், என் மீது பொய்யான புகார் அளித்ததன் காரணமாக பெரம்பலூர் மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதுவும் அவர்கள் நேராக போலீசுக்கு செல்லவில்லை. பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் புகார் கொடுத்து, அதன்பின் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் 2022 டிசம்பரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
என் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் ஆவணங்களை வழங்க உத்தரவிடுமாறு மகளிர் நீதிமன்றத்தில் கேட்டேன். ஆனால் ஆவணங்களை பெற தொடர்ந்து தாமதம் ஏற்பட்டதால், சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்ட பிறகுதான் வழக்கு ஆவணங்களையும் பெறமுடிந்தது.
என் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாகத்தான் இந்த புகாரை கொடுத்திருக்கிறார்கள்” என்றவரிடம்,’
“உங்கள் மீது அவர்களுக்கு என்ன காழ்ப்புணர்வு?” என்று கேட்டோம்.
“அதாவது நிரந்த பயிற்சியாளர் பணிக்கு 2012க்கு பிறகு 2022 டிசம்பரில்தான் தான் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்கள்.
இந்த சூழலில் என் மீது எப்.ஐ.ஆர் இருந்தால் எனக்கு வேலை கிடைக்காது என்ற நோக்கத்தில், எனது வளர்ச்சியை பிடிக்காத சிலரின் தூண்டுதலின் பேரில் வழக்கு தொடர்ந்திருந்தார்கள். அந்த மாணவிகளுக்கு அப்போது வயது 17க்கு கீழ் இருந்ததால் உடனடியாக போலீசார் வழக்குப்பதிவு செய்துவிட்டார்கள்.
இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போதே, நிரந்தர பயிற்சியாளர் பணிக்கான தேர்வை எழுதினேன். ஆனால் வழக்கு காரணமாக என்னுடைய ரிசல்ட்டை மட்டும் நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.
இத்தனைக்கும் என் மீது பொய்யான புகார் கொடுக்க சொன்ன அரவிந்த் என்னுடைய முன்னாள் மாணவர். பிரதீப் ஷெட்டில் விளையாட வந்தவர். இவர்கள் மட்டுமின்றி இன்னும் சிலர் எனக்கு எதிராக சதி செய்திருக்கிறார்கள். இதில் இவர்கள் இருவரும் இருப்பது தெரியவந்துள்ளது.
போலீசாரும் சரியாக விசாரிக்காமல் எப்.ஐ.ஆர் பதிவு செய்திருக்கிறார்கள். 2022 டிசம்பர் 26 என்னை ரிமாண்ட் செய்தனர். அதன் பிறகு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு போட்டு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தேன். பெரம்பலூர் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை தாமதமானதால், ‘இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும், என் மீது எந்த குற்றமும் இல்லை’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன்.
இதை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மாணவிகளை நேரடியாக அழைத்து விசாரித்தார். பிரதீப், அரவிந்தன் ஆகியோர் கட்டாயப் படுத்தியதால்தான் கையெழுத்து போட்டோம் என்று மாணவிகள் சொன்னார்கள். இதை விசாரித்து என்னை வழக்கில் இருந்து நீதிபதி விடுவித்துவிட்டார்.
இந்த பொய்யான வழக்கால் எனக்கு நிரந்தர வேலையும் கிடைக்க வில்லை. பண ரீதியாக மட்டுமல்ல குடும்ப ரீதியாகவும் பிரச்சினை ஏற்பட்டது. தற்போது நீதிமன்றம் நான் அப்பழுக்கற்றவர் என விடுவித்திருக்கும் நிலையில் எனது தேர்வு முடிவை வெளியிட வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார் தர்மராஜன்.
சட்டங்கள் அவை இயற்றப்பட்டதன் உண்மையான நோக்கத்துக்காக பயன்பட வேண்டும். இதுபோன்ற காழ்ப்புணர்வை வெளிப்படுத்த சட்டம் ஒரு கருவியாக பயன்படக் கூடாது என்பதை நீதிபதி ஆனந்த வெங்கடேஷின் தீர்ப்பு அழுத்தமாக சொல்லியிருக்கிறது.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவனைக் காப்பாற்றிய கனிமொழி
எலக்ஷன் ஃப்ளாஷ்: திருநாவுக்கரசருக்கு எதிராக காங்கிரசில் புதிய அமைப்பு! கவனிக்கும் நேரு
எலெக்ஷன் ஃப்ளாஷ்: விஜய் புது கட்சி… திமுக மாசெக்களுக்கு திடீர் உத்தரவு!
ஆஸ்திரேலியாவை கதறவிட்ட இளம்வீரர்… ஐபிஎல்க்கு வந்துட்டாரு… எந்த டீம்னு பாருங்க!