என்சிசி பயிற்சியாளரும் நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி முன்னாள் கிழக்கு மாவட்ட இளைஞர் பாசறை மாவட்டச் செயலாளருமான சிவராமன் என்பவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாலியல் வன்கொடுமை குறித்து மாணவி போலீசில் புகார் அளித்ததால் சிவராமன் உள்ளிட்ட 8 பேர் மீது போக்சோ வழக்கு பாய்ந்தது. இதற்கிடையே, தலைமறைவான சிவராமன் கிருஷ்ணகிரி மாவட்டம் துரிஞ்சிப்பட்டி அருகே உள்ள பொன்மலைகுட்டை பகுதியில் பதுங்கி இருப்பதை போலீசார் கண்டறிந்து சுற்றி வளைத்தனர் .அப்போது அவர் போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்து ஓடினார். இந்த சமயத்தில் அங்கிருந்த பள்ளத்தில் குதித்ததில் அவரின் வலது காலில் எலும்பு முறிந்து போனதாக போலீசார் கூறுகின்றனர்.
தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் சுதாகர் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவராமன் மேலும் 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் கொடுத்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. அது மட்டுமின்றி, இவர் உண்மையில் என்.சி.சி பயிற்சியாளரே இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. இதற்காக, மத்திய அரசின் கீழ் இயங்கும் என்.சி.சி. அமைப்பில் எந்த ஒரு சான்றிதழையும் அவர் பெற்றிருக்கவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆனால், பல்வேறு தனியார் பள்ளிகளில் சிவராமன் என்சிசி பயிற்சியாளராக பணியாற்றி வந்துள்ளார். பள்ளிகளுக்கு தாமாக சென்று, ‘நான் ஒரு என்.சி.சி பயிற்சியாளர்’ எனக்கூறி, கணிசமான தொகை வாங்கிக் கொண்டு மாணவிகளுக்கு பயிற்சி தருவதாக கூறி ஏமாற்றி வந்துள்ளார். இதனால், இவரால் பல மாணவிகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்பட்டு, விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.
இந்தநிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் என்சிசி முகாம் எதுவும் நடத்தப்படவில்லை என்றும் பாலியல் வன்கொடுமையில் தொடர்புடைய நபர்களுக்கும் என்சிசிக்கும் எந்தவிதமான தொடர்புமில்லை என்றும் என்சிசி இயக்குனரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
திமுக விழாவுக்கு ராஜ்நாத்தை மோடி அனுப்பிய பின்னணி!
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா… மனைவி கொடுமைக்கு பயந்து மொட்டையடித்த ஐடி இளைஞர்!