பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா,மகள்களுடன் ராமேஸ்வரம் அருகே நம்பு நாயகி அம்மன் கோவிலில் மஞ்சள் அரைத்தும் பாமகவின் சின்னமான மாம்பழம் வைத்தும் வழிபாடு நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. PMK’s Mango Symbol and Turmeric Ritual by Sowmya Anbumani in Rameswaram
பாட்டாளி மக்கள் கட்சியின்(பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மகனும் பாமக தலைவருமான அன்புமணி இடையே மோதல் நீடித்து வருகிறது. அன்புமணி, அவரது மனைவி சவுமியா ஆகியோர் மீது கடும் விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் கூறி வருகிறார் டாக்டர் ராமதாஸ்.
மேலும், “2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது அதிமுகவுடன் தாம் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தி முடித்த நிலையில், பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் அப்போது தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலைக்கு தடபுடலாக விருந்து வைத்தவர்கள்தான் அன்புமணியும் சவுமியாவும்: பாஜகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையை நடத்தி முடித்தவர் சவுமியா” என்றும் ராமதாஸ் குற்றம் சாட்டி இருந்தார்.
இதற்கு அன்புமணி நேரடியாக பதிலளிக்காமல், நான் தவறு செய்திருந்தால் மன்னித்துவிடுங்கள் என பாமகவின் மாவட்ட பொதுக் குழு கூட்டங்களில் பேசி வருகிறார். சவுமியா அன்புமணியோ, இதுவரை டாக்டர் ராமதாஸுக்கு எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் மகள்களுடன் ராமேஸ்வரம் சென்ற சவுமியா அன்புமணி அங்கு கோவில் ஒன்றில் வழிபாடு நடத்தியது தற்போது பேசு பொருளாகி இருக்கிறது.
ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி செல்லும் சாலையில் புதுரோடு பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற நம்பு நாயகியம்மன் திருக்கோவில். இந்த கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
நம்பு நாயகி அம்மன் கோவிலில் பக்தர்கள் வேண்டியது நிறைவேறுவதற்காக, அங்கு வைக்கப்பட்டுள்ள அம்மியில் மஞ்சள் அரைத்து அதனை வைத்து அம்மனை வழிபடும் முறை பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்த நம்பு நாயகி அம்மன் கோவிலுக்கு மகள்களுடன் சென்றார் சவுமியா அன்புமணி. பின்னர் மகள்களுடன் அம்மியில் மஞ்சள் அரைத்து அம்மனுக்கு படையல் படைத்தார் சவுமியா.

அத்துடன் அம்மன் சன்னதியில் பாமகவின் சின்னமான மாம்பழங்களையும் சேர்த்து வைத்து சவுமியா அன்புமணி பூஜை செய்ததுதான் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாமகவின் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கிவிட்டதாக ராமதாஸ் அறிவித்தார். அன்புமணியின் பதவி காலம் முடிவடைந்துவிட்டது என்றும் ராமதாஸ் கூறியுள்ளார்.
ஆனால் பாமகவின் தலைவராக 2026-ம் ஆண்டு வரை நீடிக்க தமக்கு தேர்தல் ஆணையம் கடிதம் வழங்கி இருக்கிறது என்கிறார் அன்புமணி.
இதனிடையே ராமதாஸும், அன்புமணியும் பாமக பொதுக்குழுவை கூட்டவும் இருக்கின்றனர். திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் நாள்தோறும் பாமக நிர்வாகிகளை ராமதாஸ் சந்தித்து வருகிறார்; ஒவ்வொரு மாவட்டமாக சென்று மாவட்ட பொதுக்குழு கூட்டங்களை அன்புமணி ராமதாஸ் நடத்தி வருகிறார்.
இதனால் பாமக பிளவுபடும் சூழ்நிலை உருவாகி உள்ளது. பாமவின் 80% நிர்வாகிகள் அன்புமணி பக்கம் இருக்கின்றனர். இந்த பின்னணியில் பாமக கட்சியும் பாமகவின் சின்னமான மாம்பழ சின்னமும் அன்புமணிக்கே கிடைக்க வேண்டும் என்பதற்காக சவுமியா, மாம்பழத்தை அம்மன் சன்னதியில் வைத்து பூஜை செய்தாரா? என்கிற கேள்வியும் விவாதமும் நடைபெற்று வருகிறது.
