பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் இன்று ஆகஸ்ட் 17-ந் தேதி நடைபெற்று வரும் பாமக சிறப்பு பொதுக்குழு (PMK Special General Council) கூட்டத்தில் அன்புமணிக்கு எதிராக, “தந்தை சொல்மிக்க மந்திரமில்லை அய்யா முடிவே இறுதியானது” என்ற பதாகைகளை உயர்த்திப் பிடித்தபடி பாமக நிர்வாகிகள் பங்கேற்றது கவனம் பெற்றது.
பாமகவின் (செயல்) தலைவரான அன்புமணி தலைமையில் மாமல்லபுரத்தில் ஆகஸ்ட் 9-ந் தேதி பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில், பாமக தலைவர் பதவியில் மேலும் ஓராண்டு அன்புமணி நீடிப்பார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு அந்த பொதுக்குழுவில் தனி இருக்கையும் போடப்பட்டிருந்தது. இந்தப் பொதுக்குழுவை ராமதாஸ் அணி நிராகரித்துள்ளது.

இந்த நிலையில் ராமதாஸ் தலைமையிலான பாமகவின் சிறப்பு பொதுக்குழு இன்று புதுச்சேரி அருகே பட்டானூர் சங்கமித்ரா அரங்கத்தில் நடைபெற்று வருகிறது.
இன்றைய பாமக பொதுக்குழுவில் 4,500 பேர் பங்கேற்றுள்ளனர். இவர்களி 3,000 பேர் பாமக நிர்வாகிகள்; 1,500 பேர் நிர்வாகிகளுடன் வந்தவர்கள். 75 பேர் மட்டுமே பெண்கள்.

இந்த பொதுக்குழுவில் பங்கேற்ற பாமகவினர், அன்புமணிக்கு எதிராக “தந்தை சொல்மிக்க மந்திரமில்லை அய்யா முடிவே இறுதியானது” என்ற பேனரை உயர்த்தி பிடித்திருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
இந்த பொதுக்குழுவில், பாமகவின் நிறுவனரான டாக்டர் ராமதாஸுக்கு கட்சி தொடர்பாக முடிவெடுக்கும் முழு அதிகாரம் வழங்க, அக்கட்சியின் சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது.
