பாமகவில் தொடர்ந்து மோதல் நீடித்து வந்த நிலையில் திடீர் திருப்பமாக, தந்தை ராமதாஸை மகன் அன்புமணி இன்று ஜூன் 5-ந் தேதி தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 1 மணிநேரத்துக்கும் மேலாக நடைபெற்றது.
பாமகவின் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக நிறுவனர் ராமதாஸ் அறிவித்ததைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே மோதல் உச்சகட்டத்தை எட்டியது. பாமக பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதால் தாமே தலைவர் என அன்புமணி செயல்பட்டு வந்தார்.
மேலும் டாக்டர் ராமதாஸ் கூட்டிய மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் அன்புமணி ஆதரவாளர்கள் பங்கேற்கவில்லை. ஆனால் அன்புமணி நடத்திய கூட்டங்களில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் 80%-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
இதனையடுத்து அன்புமணியின் ஆதரவாளர்களை அடுத்தடுத்து டாக்டர் ராமதாஸ் நீக்கினார்; இதற்கு பதிலடியாக நீக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு அன்புமணி பதவி வழங்கினார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், அன்புமணியும் பாமகவில் இருந்து நீக்கப்படுவாரா? என்ற கேள்விக்கு வரும் வியாழக்கிழமை முக்கிய முடிவு அறிவிக்கப்படும் என கூறியிருந்தார்.
இந்த நிலையில் ராமதாஸ்- அன்புமணி இடையே சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை ராமதாஸ் மகள்கள் காந்தி, கவிதா மற்றும் பாமக மூத்த தலைவர் திருக்கச்சூர் ஆறுமுகம் உள்ளிட்டோர் மேற்கொண்டு வந்தனர். இந்த மோதல் தொடர்ந்தால் மிக மோசமான பாதிப்புகள் ஏற்படும் என்பதால் ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரும் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கும் ஒப்புக் கொண்டனர்.
இந்தப் பேச்சுவார்த்தைகளின் முடிவில் 3 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளனவாம்.
- பாமகவின் தலைவராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து செயல்படுவார்
- ராமதாஸின் பேரன் முகுந்தனுக்கு பாமகவில் முக்கிய பதவி வழங்கப்படுவதை அன்புமணி ஏற்றுக் கொள்வார்
- பாமக எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்பதை டாக்டர் ராமதாஸ் முடிவு செய்வார்
இந்த முடிவுகளுக்கு ராமதாஸ், அன்புமணி இருவரும் ஒப்புக் கொள்ளும் நிலையில் பாமகவின் உட்கட்சி மோதல் முடிவுக்கு வரும். இதனைத் தொடர்ந்தே டாக்டர் ராமதாஸை சந்திக்க சென்னையில் இருந்து அன்புமணி, மகளுடன் சென்று தைலாபுரத்தில் டாக்டர் ராமதாஸை சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் 1 மணிநேரம் நடைபெற்றது. இச்சந்திப்பைத் தொடர்ந்து தைலாபுரம் தோட்டத்தில் இருந்து அன்புமணி ராமதாஸ் புறப்பட்டுச் சென்றார்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்திக்கும் ராமதாஸ், இருதரப்பும் எடுத்த முடிவுகள் குறித்தும் அறிவிக்க வாய்ப்பிருக்கிறது என்கின்றன பாமக வட்டாரங்கள்.
