’அரைவேக்காடு’, ’நோய்க்கிருமி’ : திலக பாமாவை சாடிய வடிவேல் ராவணன்… பாமகவில் மீண்டும் புகைச்சல்!

Published On:

| By christopher

pmk gs vadivel ravanan attack thilagabama

ராமதாஸ் குறித்து கூறியவற்றைத் திரும்பப் பெற்றுக் கொண்டு, அப்படியே கட்சியிலிருந்து திலகபாமா வெளியேறிவிட வேண்டும் என பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் தெரிவித்துள்ளார். pmk gs vadivel ravanan attack thilagabama

சமீபத்தில் பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கியதாக ராமதாஸ் அறிவித்தார்.

அன்புமணிக்கு ஆதரவு!

இதனையடுத்து ராமதாஸை விமர்சித்து பாமக பொருளாளர் திலகபாமா தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அதில், “பாட்டாளி மக்கள் கட்சியின் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது. இதுவரை அய்யா எடுத்த எல்லா முடிவுகளும் சரியே . அய்யாவின் அன்பினை ருசித்தவள் நான். ஆனால் இந்த முடிவு தவறு… அன்புதானே எல்லாம்” என்று தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து இருதரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அதன் முடிவாக ‘நான் தான் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்’ என்று அன்புமணி கடந்த 12ஆம் தேதி இரவு அறிவித்தார். தொடர்ந்து சித்திரை முழுநிலவு மாநாட்டுக்கான ஏற்பாடுகளில் அவர் தீவிரம் காட்டி வருகிறார்.

ராமதாஸும் சித்திரை திருநாளுக்காக நேற்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘நிறுவனர்’ என்றே குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், ராமதாஸை விமர்சித்த பாமக பொருளாளர் திலகபாமா கட்சியிலிருந்து வெளியேற வேண்டுமெனக் கூறி பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன் கடும் வார்த்தைகளால் சாடியுள்ளார்.

கொள்கை கோட்பாடுகள் ஒன்றும் தெரியாது!

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “பாட்டாளி மக்கள் கட்சியின் அண்மை நிகழ்வுகள் பற்றிக் கட்சியின் பொருளாளராக இருக்கும் திலகபாமா என்பவர் கூறுகையில், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் எல்லா நிலைகளிலும் சரியான முடிவெடுத்துச் சரியான செயல்பாடுகளுக்கு வழிகாட்டுவார். இப்போது தவறான முடிவெடுத்து இருக்கிறார். இது ஒரு ஜனநாயகப் படுகொலை என்று சிறிதும் பொருளற்ற முறையில் சிறுபிள்ளைத் தனமாக ராமதாஸ் மீது குற்றம் சாட்டியிருக்கிறார்.

திலகபாமா கட்சிக்கு நேற்று வந்தவர். பா.ம.க.வின் கொள்கை கோட்பாடுகள் பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது. கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சி மேற்கொண்ட போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் எதிலும் கலந்து கொள்ளாதவர்.

கட்சிக்குள் புகுந்த நோய்க்கிருமி!

திலகபாமா பாட்டாளி மக்களின் தோழர் அல்லர். மேட்டுக் குடியினம். பெண்களுக்குத் தலைமையில், அதுவும் பொருளாளர் பொறுப்பு வழங்க வேண்டும் என்று ராமதாஸின் பரிந்துரையிலும், ஆதரவிலும் பதவி பெற்றவர். பல மாவட்டங்களில் பல ஆண்டுகளாக பாடுபட்டு வந்த பாட்டாளி சொந்தங்களை விரட்டி அடித்தவர். உடனிருந்தே கொள்ளும் நோய் இவர்.

அரசியல் என்னவென்றே தெரியாத அரைவேக்காடு இவர். பாட்டாளிகளின் உயிரியக்கமான பா.ம.க.வை அழிப்பதற்காக வெளியில் இருந்து கட்சிக்குள் புகுந்த நோய்க்கிருமி.

தமிழகத்திலேயே ஏன், இந்தியாவிலேயே ஜனநாயகப் பண்புள்ள ஒரே கட்சி பா.ம.க. ஜனநாயக மரபுகளையும், சமூக நீதிக் கோட்பாட்டினையும் கட்சிக்குள்ளே பேணிக் காத்து வரும் ஒரே தலைவர் ராமதாஸ். அரசியல் கட்சிகள் கடந்து அனைவராலும் பாராட்டப்பெறும் ஒரே தலைவர். அவர் விடுக்கும் அறிக்கைகளே அனைவருக்கும் அரசியல் அகரமுதலி.

வெளியேறி விடுவது அவருக்கு நல்லது!

ராமதாஸை ஜனநாயகப் படுகொலை செய்தவர் என்று நெஞ்சிலே வஞ்சக எண்ணத்தோடு சொற்களை அள்ளி வீசிய திலகபாமாவை வன்மையாகக் கண்டிக்கிறேன். கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறேன். பல்வேறு மாநில பொறுப்புகளை ஏற்றுப் பணியாற்றி வந்த நான் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து வருகிறேன்.

நெஞ்சிலே கொஞ்சமும் நன்றியுணர்ச்சி இன்றி ராமதாஸை வசை பாடி இருக்கும் திலகபாமா உடனடியாக கட்சியிலிருந்து வெளியேறி விடுவதுதான் அவருக்கு நல்லது. திமுக தலைவர் கலைஞர் போன்றவர்களே தைலாபுரத்திலிருந்து எப்போது தைலம் வரும் என்று காத்திருக்கையில், நேற்று முளைத்த காளான்கள் அவரை வசை பாடுவதுதான் பேரவலம்.

மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரசுகள் எதுவாயினும், கூட்டணி கட்சியே என்றாலும் ஆட்சியாளரின் தவறான போக்குகளையும், ஆட்சியின் குறைபாடுகளையும் ஏமரா மன்னனை இடித்துரைக்கும் சான்றோனாக விளங்கிவரும் ராமதாஸை, நேற்றுக் கட்சிக்குள் வந்த திலகபாமா வசைபாடி மகிழ்வதை விடுத்து, தான் கூறியவற்றைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும். அப்படியே கட்சியிலிருந்து வெளியேறிவிட வேண்டும் என்று அறிவுறுத்துகிறேன்“ என் வடிவேல் இராவணன் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share