பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் தலைவர் டாக்டர் ராமதாஸ் கூட்டிய மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தை அவரது மகன் அன்புமணி ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆதரவு மாவட்ட தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூண்டோடு புறக்கணித்துள்ளனர்.
பாமகவின் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு டாக்டர் ராமதாஸ் அழைப்பு விடுத்திருந்தார். திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்துக்கு மொத்தம் 216 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் டாக்டர் ராமதாஸ் கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தை அவரது மகன் அன்புமணி ராமதாஸ் உட்பட பெரும்பாலான பாமக மாவட்டச் செயலாளர்கள், மாவட்டத் தலைவர்கள் புறக்கணித்துள்ளனர்.
இது தொடர்பாக இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய டாக்டர் ராமதாஸ், பாமகவின் வளர்ச்சிக்காக இந்த ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. செயல் தலைவர் அன்புமணி ராமதாஸுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் மாமல்லபுரம் மாநாடு களைப்பில் இருப்பதால் சிலர் இந்தக் கூட்டத்துக்கு வரவில்லை; சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைந்துவிடாது; பாமக நிச்சயம் கூட்டணி அமைத்துப் போட்டியிடும்; தனித்து நின்று போட்டியிட்டாலும் கூட 40 தொகுதிகளில் வெல்ல வேண்டும்; 50 தொகுதிகளில் படுத்துக் கொண்டே வெல்வது எப்படி என்பதை இந்தக் கூட்டத்தில் சொல்லி இருக்கிறேன் என்றார்.
முன்னதாக கடந்த 14-ந் தேதி, மாமல்லபுரம் மாநாட்டுக்காக சிறப்பாக பணி செய்த வன்னியர் சங்க நிர்வாகிகள் மற்றும் பாமகவினருக்கு திருப்போரூர் திருமண மண்டபம் ஒன்றில் பிரியாணி விருந்து கொடுத்து பாராட்டினார் அன்புமணி ராமதாஸ். இந்தப் பாராட்டு விழாவில் பாமக நிர்வாகிகள் பெருந்திரளாகப் பங்கேற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
