பாமக மாநாடு : வடக்கு மண்டல ஐஜிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published On:

| By Kavi

பாமக மாநாட்டுக்கு தேவைப்பட்டால் கூடுதல் நிபந்தனைகளை விதிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக காவல்துறைக்கு அனுமதி வழங்கியுள்ளது.pmk convention court order

பாமக சார்பில் வரும் 11ஆம் தேதி மாமல்லபுரத்தில் சித்திரை முழு நிலவு மாநாடு நடத்தப்படவுள்ளது.

இந்த மாநாட்டுக்கு பாமகவினர் தயாராகி வரும் நிலையில் ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த முத்துக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

அதில், “சித்ரா பௌர்ணமி நாளில் பாமக மாநாடு நடத்துவதால் பக்தர்கள் பாதிக்கப்படுவார்கள். அதனால் இந்த மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.

2013 ஆம் ஆண்டு நடந்த மரக்காணம் கலவரம், 20% இட ஒதுக்கீடு கேட்டு நடத்தப்பட்ட போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறை ஆகியவற்றையும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மாலா மற்றும் அருள்முருகன் அமர்வில் இன்று (மே 8)  விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில், “மாநாடு நடக்கும் நாளன்று ஈசிஆர் சாலையை யாரும் பயன்படுத்த வேண்டாம் என்று பாமக தலைவர் கூறியிருக்கிறார்” என கூறி அன்புமணி ராமதாஸ் பேசிய வீடியோ ஒன்று நீதிபதிகள் முன்பு போட்டு காண்பிக்கப்பட்டது.

பாமக சார்பில், “காவல்துறை விதித்த அத்தனை நிபந்தனைகளும் கண்டிப்புடன் பின்பற்றப்படும். எந்த அசம்பாவித சம்பவங்களுக்கும் இடம் கொடுக்காமல் அமைதியான முறையில் மாநாடு நடத்தப்படும்” என்று உறுதியளிக்கப்பட்டது.

இந்த வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “மாநாட்டுக்கு அனுமதி அளித்து பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்ட நிபந்தனைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று வடக்கு மண்டல ஐஜியிடம் உத்தரவாதம் வழங்க வேண்டும். மாநாட்டுக்கு வருபவர்கள் எந்த ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் எடுத்து வரக்கூடாது. மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் முறையாக காவல்துறையிடம் அனுமதி பெற்று வர வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும், மாநாட்டின் போது பாதுகாப்புக்காக கூடுதல் போலீசாரை பணியமர்த்த வேண்டும். மாநாடும் சித்ரா பௌர்ணமி விழாவும் அமைதியாக நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வடக்கு மண்டல ஐஜிக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

தேவைப்பட்டால் போலீசார் கூடுதல் நிபந்தனைகளை விதிக்கலாம் எனவும் அரசுக்கு அனுமதி வழங்கினர். pmk convention court order

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share