முஸ்லீம் பெண்களின் பள்ளி இடைநிற்றல் குறைந்துள்ளது: பிரதமர்!

Published On:

| By Balaji

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்நிகழ்ச்சியின் நினைவாக ஒரு தபால் தலையையும் வெளியிட்டார்.

விழாவில் பேசிய பிரதமர், “ஒருவரின் மதம் காரணமாக யாரும் பின்னுக்குத் தள்ளப்பட மாட்டார்கள். இதுதான் அனைவருக்குமான வளர்ச்சியின் அடிப்படை” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT

இந்தியாவில் 40 கோடி மக்களுக்கு வங்கி கணக்குகள், 2 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு, கான்கிரீட் வீடுகள், 8 கோடிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு கேஸ் இணைப்புகள், சுமார் 50 கோடி மக்களுக்கு ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் சிகிச்சை என யாருக்கும் பாகுபாடு இன்றி அரசின் பலன்கள் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், “கொரோனா தொற்று நேரத்தில் சமூகத்துக்கு அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் பெரும்பங்காற்றியுள்ளது. மக்களை இலவச பரிசோதனைகளை மேற்கொள்ள வைத்தது, தனிமைப்படுத்தும் வார்டுகள் மற்றும் பிளாஸ்மா வங்கிகளை உருவாக்கியது. பிரதமரின் நிவாரண நிதிக்கு மிகப் பெரிய தொகையைப் பல்கலைக் கழகம் வழங்கியது. இதுபோன்ற ஒருங்கிணைந்த முயற்சிகளால், இந்தியா கொரோனா தொற்றுக்கு எதிராக வெற்றிகரமாகப் போராடி, நாட்டை உயர்ந்த இடத்தில் வைத்துள்ளது” என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவில் முஸ்லிம் பெண்களின் பள்ளி இடைநிற்றல் விகிதம் 70 சதவிகிதமாக இருந்தது. இது தற்போது 30 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் கிராமங்களில் கழிப்பறை கட்டுதல் மற்றும் பெண்கள் பள்ளியில் கழிப்பறை கட்டியதன் மூலம் 30 சதவிகிதமாக குறைந்துள்ளது. முஸ்லிம் பெண்களின் கல்வி மற்றும் அவர்களின் மேம்பாட்டில் அரசு அதிக அக்கறை செலுத்துகிறது. கடந்த 6 ஆண்டுகளில், சுமார் ஒரு கோடி முஸ்லிம் மாணவிகளுக்குக் கல்வி உதவித் தொகையை அரசு வழங்கியுள்ளது” என்று குறிப்பிட்டார்.

ADVERTISEMENT

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் உள்ள துறைகள், விடுதிகள், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களைப் பார்க்கும் போது, மினி இந்தியாவைப் பார்ப்பது போல் உள்ளது. இங்குப் பார்க்கும் பன்முகத்தன்மையானது, இப்பல்கலைகழகத்திற்கு மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த நாட்டிற்கும் பலமாகவுள்ளது என்று தெரிவித்த பிரதமர் மோடி, வெளிநாடுகளுக்குச் செல்லும் போது இப்பல்கலையின் முன்னாள் மாணவர்கள் பலரை சந்தித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

**-பிரியா**

ADVERTISEMENT
Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share