”அதானியை காப்பாற்ற நினைக்கிறார் பிரதமர் மோடி” – ராகுல்காந்தி

Published On:

| By christopher

நாடாளுமன்றத்தில் இன்று (பிப்ரவரி 8) பேசிய பிரதமர் மோடியின் உரையின் மூலம் அதானியை அவர் காப்பாற்ற நினைக்கிறார் என்பது தெளிவாகிறது என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி 31ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் அதானி குழும மோசடி குறித்து விவாதிக்க வலியுறுத்தி வருகின்றன.

குறிப்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல்காந்தி நேற்று பேசுகையில், “பிரதமர் மோடி வெளிநாடு செல்லும் போதெல்லாம் அதானிக்கு ஒப்பந்தம் கிடைக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்த 8 ஆண்டுகளில் அதானியின் சொத்து மதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது. அதானிக்கும், பிரதமருக்கும் என்ன தொடர்பு?” என்று கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி இன்று பேசினார். அப்போது ராகுல்காந்தியின் பேரை குறிப்பிடாமல் அவரை மறைமுகமாக விமர்சித்தார். ஆனால் அதானி விவகாரம் குறித்து ஒரு வார்த்தைக் கூட பிரதமர் பேசவில்லை.

இதனையடுத்து அதானியை பிரதமர் மோடி காப்பாற்ற நினைப்பதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த அவர், “பிரதமர் மோடி அதிர்ச்சியில் உள்ளார். அவரது இன்றைய உரையில் எனக்கு திருப்தி இல்லை. அதானி குறித்த எனது எந்த கேள்விக்கும் பிரதமர் பதில் அளிக்கவில்லை.

அதேவேளையில் நான் எந்த சிக்கலான கேள்விகளையும் கேட்கவில்லை. கௌதம் அதானி பிரதமருடன் எத்தனை முறை சென்றார்? எத்தனை முறை சந்தித்தார்? என்றுதான் நான் கேட்டேன்.

ஆனால் அதானி குழுமம் மீது விசாரணை நடத்துவது குறித்து பிரதமர் மோடி எந்த விளக்கமும் தரவில்லை. அவரின் பார்வையில் அதானி மீது விசாரணை என்று பேச்சுக்கே இடம் கொடுக்கவில்லை.

அதானி தனது நண்பர் இல்லை என்றால் விசாரணை நடத்தப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்திருப்பார். ஆனால் அவ்வாறு ஒரு வார்த்தைக்கூட கூறவில்லை.

இதன்மூலம் அதானியை பிரதமர் மோடி காப்பற்ற நினைக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.

இது நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பை உள்ளடக்கியது. விசாரணை நடத்தப்படும் என்று பிரதமர் கூறியிருக்க வேண்டும். ஆனால் அவர் ஏன் செய்யவில்லை. என்று கூறியுள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

காதலர் தினத்தில் பசுவை கட்டிப்பிடிங்க! : மத்திய அரசு வேண்டுகோள்

ஈரோட்டில் எடப்பாடி நடத்திய அவசர ஆலோசனை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share