மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி நேற்று (ஏப்ரல் 4) இரவு இலங்கை சென்றார். இன்று (ஏப்ரல் 5) அதிபர் மாளிகையில், இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்கவை சந்தித்து இரு நாடுகளின் நட்புறவை வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். Modi urges immediate release
மித்ரா விபூஷன் விருது!
தொடர்ந்து இலங்கையின் மிக உயரிய விருதான, மித்ரா விபூஷன் விருதை பிரதமர் மோடிக்கு அனுர குமார திசநாயக்க வழங்கி கெளரவித்தார். இதனை தொடர்ந்து இந்தியாவும் இலங்கையும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி,
“இலங்கையின் மிக உயரிய விருதான மித்ரா விபூஷன் விருதை எனக்கு வழங்கியிருப்பதன் மூலம் 140 கோடி இந்தியர்களையும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள். இது இலங்கைக்கும் இந்திய மக்களுக்கும் இடையிலான வரலாற்று ரீதியான உறவையும் ஆழமான நட்பையும் காட்டுகிறது.
கடந்த 6 மாதங்களில், இலங்கைக்கு 100 மில்லியனுக்கும் அதிகமான கடன்களை மானியங்களாக மாற்றியுள்ளோம். இருதரப்பு கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் இலங்கை மக்களுக்கு உடனடி உதவியாக இருக்கும். தற்போது, வட்டி விகிதங்களைக் குறைக்க முடிவு செய்துள்ளோம். இந்தியா இலங்கை மக்களுடன் தொடர்ந்து துணை நிற்கிறது என்பதையே இது காட்டுகிறது.
பிரதமராக பதவியேற்ற பிறகு இலங்கைக்கு நான்காவது முறையாக வருகை தந்துள்ளேன். கடந்த முறை நான் வந்தபோது கடுமையான பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கியிருந்தது.

தமிழர்களுக்கு 10,000 வீடுகள்!
அந்த நேரத்தில், இலங்கை எழுச்சி பெற்று வலுவாக உயரும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. இன்று, இலங்கை மீண்டும் முன்னேற்றப் பாதையில் செல்வதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.
2019 பயங்கரவாதத் தாக்குதல், கோவிட் தொற்று, சமீபத்திய நிதி நெருக்கடி என எப்போதும் நாங்கள் இலங்கை மக்களுடன் துணை நின்றுள்ளோம்.
இந்திய மீனவர்களை உடனடியாக விடுவித்து, அவர்களின் படகுகளை திருப்பி அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினேன். இந்த விவகாரத்தில் மனிதாபிமான முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இருவரும் முடிவு செய்தோம்.
இலங்கை அரசு தமிழர்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும். இலங்கையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழ் மக்களுக்கு விரைவில் 10,000 வீடுகள் கட்டி முடிக்கப்படும் என்று அனுர குமார திசநாயக்க உறுதியளித்துள்ளார்” என்று தெரிவித்தார்.

இழுவை மீன்பிடித்தலை தடுக்க வேண்டும்!
இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்க பேசும்போது,
“இலங்கைக்கு வந்திருக்கும் பிரதமர் மோடி மற்றும் இந்திய குழுவினரை நான் வரவேற்கிறேன். இந்த சந்திப்பானது இலங்கையும் இந்தியாவும் நீண்டகாலமாக மேற்கொண்டு வரும் நெருக்கத்தையும் நட்பையும் பிரதிபலிக்கிறது. எங்களது நட்புறவு பரஸ்பர மரியாதை மற்றும் பொதுவான நலன்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பாக, பிரதமர் மோடியும் நானும் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். இந்த பேச்சுவார்த்தையில், இரு தரப்பின் தற்போதைய நிலை குறித்து ஆலோசனை செய்தோம். மேலும், எதிர்காலத்தில் இருதரப்பு நாடுகளின் உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக கருத்துக்களை பகிர்ந்து கொண்டோம்.
இருநாடுகளிலும் தடை செய்யப்பட்டுள்ள இழுவை மீன்பிடித்தலை தடுக்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் சுற்றுச்சூழலுக்கு கடுமையான சேதம் ஏற்படுகிறது” என்று தெரிவித்தார். Modi urges immediate release