பாஜக கூட்டணி ஆளும் மாநிலங்களின் முதல்வர்களை மட்டும் மே 25-ல் சந்திக்கும் பிரதமர் மோடி- புது சர்ச்சை!

Published On:

| By Minnambalam Desk

Operation Sindoor ராணுவ நடவடிக்கை தொடர்பாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் மாநிலங்களின் முதல்வர்களை மட்டும்
வரும் மே 25-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேச இருப்பது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.

டெல்லியில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: Operation Sindoor ராணுவ நடவடிக்கையை அரசியலாக்குவது மிகவும் தவறானது. பாதுகாப்பு விவகாரங்களை ஒருபோதும் அரசியலாக்கவே கூடாது.

ADVERTISEMENT

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் மாநிலங்களின் முதல்வர்களை மட்டும் மே 25-ந் தேதி, பிரதமர் மோடி சந்தித்து பேச இருப்பதாக எங்களுக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. அப்படியானால் கர்நாடகா, மேற்கு வங்கம், தமிழ்நாடு, தெலுங்கானா, இமாச்சல பிரதேசம், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களின் முதல்வர்கள் என்னதான் தவறு செய்துவிட்டார்கள்? ஏன் அவர்களை அழைத்துப் பேச மறுக்கிறார் பிரதமர் மோடி? Operation Sindoor ராணுவ நடவடிக்கையை அரசியலாக்குவதுதானே இது?

ஒருபக்கம் எதிர்க்கட்சிகள் எழுப்புகிற எந்த ஒரு கேள்விக்குமே பிரதமர் மோடி பதிலளிப்பதே இல்லை. மத்திய அரசு கூட்டுகிற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கூட பிரதமர் மோடி பங்கேற்பதும் இல்லை. இன்னொரு பக்கம் இப்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் மாநிலங்களின் முதல்வர்களை மட்டுமே பிரதமர் மோடி சந்தித்து பேச இருக்கிறார். இதனை ஏற்க முடியாது.

ADVERTISEMENT

மத்திய அரசிடம் பல்வேறு கேள்விகளை நாங்கள் எழுப்ப இருக்கிறோம். இதற்காக 15 மாநிலங்களில் ஜெய்ஹிந்த் சபா என்ற பெயரில் பேரணிகள் நடைபெற உள்ளன. இந்த பேரணிகளில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இவற்றில் முன்னாள் ராணுவத்தினரும் பெருந்திரளாக பங்கேற்று மத்திய அரசை நோக்கி கேள்விகளை எழுப்ப உள்ளனர். இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share