பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல் 6) ராமேஸ்வரம் வருகிறார். PM Modi to Inaugurate Pamban Bridge Today
இலங்கையில் மூன்று நாட்கள் அரசு முறை பயணத்தை முடித்துவிட்டு, அனுராதபுரத்தில் இருந்து இந்திய விமானப் படைக்கு சொந்தமான ராணுவ ஹெலிகாப்டரில் இன்று காலை மண்டபம் வந்தடைகிறார் மோடி. அங்கிருந்து காலை 11.45 மணிக்கு காரில் புறப்பட்டு சாலைமார்க்கமாக பாம்பன் புதிய பாலத்தின் மையப்பகுதியில் விழா நிகழ்ச்சி மேடைக்கு வருகிறார்.
பின்னர், புதிய ரயில் பாலத்தை ரிமோட் கண்ட்ரோல் மூலம் திறந்து வைக்கிறார். இதனை தொடர்ந்து கடலோர காவல்படையின் கண்காணிப்பு டிரோன்களின் சாகச நிகழ்ச்சியை மோடி பார்வையிடுகிறார். இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். PM Modi to Inaugurate Pamban Bridge Today

இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு மதியம் 12.25 மணிக்கு அங்கிருந்து காரில் புறப்பட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு செல்கிறார். ராம நவமி நாளான இன்று மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்படுகிறது. தொடர்ந்து ராமநாதசுவாமியையும் பர்வதவர்தினி அம்மனையும் வழிபாடு செய்கிறார்.
அங்கிருந்து சாலைமார்க்கமாக மதியம் 1.20 மணிக்கு ராமேஸ்வரம் பேருந்து நிலையத்திற்கு ரோடு ஷோ மூலம் அழைத்துவரப்படுகிறார். பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடையில், ராமேஸ்வரம் – தாம்பரம் இடையே புதிய ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.
ரூ.7,750 கோடி மதிப்பீட்டில் வாலாஜாபேட்டை – ராணிப்பேட்டை, விழுப்புரம் – புதுச்சேரி, பூண்டியன்குப்பம் – சட்டநாதபுரம், சோழபுரம் – தஞ்சாவூர் பகுதிகளுக்கான நான்கு வழிச்சாலை திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் மோடி சிறப்புரையாற்றுகிறார்.
நிகழ்ச்சியை முடித்துவிட்டு காரில் 2.45 மணிக்கு மண்டபம் புறப்படும் பிரதமர் மோடி, அங்கிருந்து மதுரை விமான நிலையம் சென்று தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மண்டபம் முதல் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் வரை 20 கி.மீ தொலைவுக்கு சாலையின் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் வருகையை ஒட்டி மோடி நேற்று (ஏப்ரல் 5) வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில், “புனிதமான ராம நவமி நாளில், தமிழ்நாட்டின் எனது சகோதர சகோதரிகளுடன் சேர்ந்திருப்பதை நான் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்.
புதிய பாம்பன் ரயில் பாலம் திறந்து வைக்கப்படவுள்ளது. ஸ்ரீ அருள்மிகு ராமநாதசுவாமி ஆலயத்தில் நான் பிரார்த்தனை நடத்தவுள்ளேன். ரூ 8,300 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளும் தொடங்கி வைக்கப்படும்” என்று தெரிவித்தார். PM Modi to Inaugurate Pamban Bridge Today