கோவையில் இன்று (மார்ச் 18) நடைபெறும் ‘ரோடு ஷோ’வில் பங்கேற்பதற்காக, கர்நாடகாவில் இருந்து தனி விமானம் மூலம் மாலை 5.45 மணிக்கு பிரதமர் மோடி கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் உள்ளிட்டோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
அங்கிருந்து ரோடு ஷோ நடைபெறும் சாய்பாபா நகர் ஏஆர்சி ஜங்ஷன் பகுதிக்கு பிரதமர் மோடி வந்தடைந்தார். தொடர்ந்து மாலை 6.10 மணிக்கு ‘ரோடு ஷோ’வை பிரதமர் மோடி துவங்கினார். அவருடன் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் திறந்தவெளி வாகனத்தில் பயணித்தனர். பிரதமர் மோடி பயணித்த கார் 5 கி.மீ வேகத்தில் சென்றது.
அங்கிருந்து கங்கா மருத்துவமனை, வடகோவை, அவினாசி லிங்கம் மகளிர் பல்கலைக்கழகம், சிந்தாமணி ஆகிய பகுதிகளின் வழியாக 2.6 கி.மீ தூரத்திற்கு ஆர்.எஸ்.புரம் வரை வாகன பேரணி செல்ல உள்ளார்.
வாகன பேரணி நடைபெறும் வழித்தடத்தின் இரு புறத்திலும், தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் வழிநெடுகிலும் திரண்டிருந்து பிரதமர் மோடிக்கு மலர்தூவி வரவேற்பளித்து, ‘மோடி…மோடி’ என்று கோஷமிட்டனர்.
வாகன பேரணி முடிந்ததும் இன்று இரவு கோவை சர்க்யூட் ஹவுஸில் பிரதமர் மோடி தங்குகிறார். பின்னர், நாளை காலை கேரளாவுக்கு செல்கிறார். அங்கிருந்து நாளை மதியம் சேலம் வரும் பிரதமர் மோடி, பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…