பொங்கலுக்கு மறுநாள் ஜனவரி 16ஆம் தேதி பள்ளிகளுக்கு மாணவர்கள் கட்டாயம் வரவேண்டும் என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள் எந்த பயமும் இன்றி நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் வகையில், டெல்லியில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சி வரும் ஜனவரி 16ஆம் தேதி பொங்கலுக்கு மறுநாள் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு மாணவர்களுடன் உரையாடவுள்ளார். இந்த நிகழ்ச்சி தூர்தர்ஷன் தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது.
பிரதமர் மோடி உரையாடுவதை முன்னிட்டு, விடுமுறை நாளான ஜனவரி 16ஆம் தேதி 9 முதல் 12ஆம் வகுப்பு வரையுள்ள அனைத்து மாணவர்களும் கட்டாயம் பள்ளிக்கு வந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்றும், அனைத்து மாணவர்களும் கட்டாயம் கலந்துகொள்வதை அந்தந்த மாவட்டத்தில் உள்ள கல்வி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் உத்தரவிடப்பட்டதாகத் தகவல் வெளியானது.
இதற்காக மின்சாரம் தடைபடாமல் மாணவர்கள் அதனைக் கண்டுகளிக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் செய்ய வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் 15ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் அதற்கு மறுநாளான 16ஆம் தேதி திருவள்ளுவர் தினமாகக் கொண்டாடப்படவுள்ளது. அன்றைய தினம் அரசு விடுமுறை நாளாகும். அந்த நாளில் மாணவ மாணவிகள் பள்ளிக்கு வந்து பிரதமர் மோடியின் நிகழ்ச்சியைக் காண வேண்டும் என்பது போன்ற உத்தரவு மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த உத்தரவைத் திரும்பப் பெறாவிட்டால் திமுக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இன்று விளக்கமளித்துள்ளது. அதில், பிரதமரின் உரையைக் காண, மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் என்று கூறவில்லை. பிரதமரின் உரையை மாணவர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் கேட்கலாம்.
பள்ளிக்கு வர மாணவர்களுக்கு விருப்பம் இருந்தால், அவர்களுக்குத் தக்க ஏற்பாடு செய்யக் கோரி, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் பொங்கல் விடுமுறை ரத்து இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோன்று அமைச்சர் செங்கோட்டையனும் மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என்ற உத்தரவுக்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் பார்க்கலாம் என்றும் கூறியுள்ளார்.
அதுபோன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார். ‘’இது கட்டாயம் அல்ல. வீடுகளில் தொலைக்காட்சி இல்லாத மாணவர்கள் பிரதமரின் உரையைப் பள்ளிகளில் வந்து கேட்கலாம் என்றுதான் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது” என்று கூறியுள்ளார்.
