காங்கிரஸ் கட்சியின் ஆணவம் அடங்கவில்லை: மக்களவையில் மோடி காட்டம்!

Published On:

| By Selvam

99 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றாலும் காங்கிரஸ் கட்சியின் ஆணவம் அடங்கவில்லை என்று பிரதமர் மோடி இன்று (ஜூலை 2) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று (ஜூலை 1) மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசும்போது, மோடி, பாஜக, ஆர்.எஸ்.எஸ் மட்டுமே இந்துக்கள் அல்ல என்றும் நீட் தேர்வு, அக்னிபத் திட்டம், விவசாயிகள் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேசினார்.

ராகுல் காந்தி பேசும்போது, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் எழுந்து நின்று பதிலளித்தனர். இந்தநிலையில், ராகுல் காந்தியின் உரையில் இருந்து 11 பகுதிகள் நீக்கப்பட்டது.

பிரதமர் மோடி தலைமையில் இன்று (ஜூலை 2) காலை நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டத்தில், “மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நடந்து கொண்டது போல நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடந்துகொள்ள வேண்டாம்” என்று என்.டி.ஏ கூட்டணி எம்.பிக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

தொடர்ந்து இன்று மாலை குடியரசு தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி  பேச எழுந்ததும், எதிர்க்கட்சிகள் “நீதி வேண்டும், நீதி வேண்டும் மணிப்பூருக்கு நீதி வேண்டும்” “ஜோடோ ஜோடோ பாரத் ஜோடோ” என்று கோஷங்களை எழுப்பினர்.

இதனால் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை சபாநாயகர் கண்டித்தார். இதனையடுத்து தனது இருக்கையில் அமர்ந்த மோடி, பின்னர் ஹெட்செட் அணிந்து பேச ஆரம்பித்தார்.

எதிர்க்கட்சிகளின் கடும் அமளிகளுக்கிடையே பேசிய பிரதமர் மோடி,  “மூன்று நாடாளுமன்ற தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி 100 தொகுதிகளை தாண்டவில்லை. தொடர் தோல்விகளில் இருந்து காங்கிரஸ் கட்சி எந்தவிதமான பாடமும் கற்கவில்லை. 99 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றாலும் காங்கிரஸ் கட்சியின் ஆணவம் அடங்கவில்லை” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

36ஆவது ஆண்டில் பாமக… இந்த பரிசாவது கொடுங்கள் : கட்சியினருக்கு ராமதாஸ் மடல்!

எனது பேச்சை மீண்டும் சேருங்கள் : ஓம்.பிர்லாவுக்கு ராகுல் கடிதம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share