“தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இடம் பெறாமல் போனதில் எங்களுக்கு எந்த வருத்தமுமில்லை” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து தேர்தலை சந்தித்தது அதிமுக . இந்தநிலையில் கடந்த ஆண்டு அதிமுக, பாஜக கூட்டணியில் பிளவு ஏற்பட்டது.
இதனையடுத்து 2024 நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் களம் காண்கிறது அதிமுக, .
இந்தநிலையில், தந்தி தொலைக்காட்சிக்கு பிரதமர் மோடி அளித்த நேர்காணலின் போது தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இடம்பெறாதது உங்களுக்கு வருத்தமா என்று நெறியாளர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மோடி, “1995-ஆம் ஆண்டு ஜெயலலிதா எனக்கு நல்ல நண்பராக இருந்தார். பின்னர் நான் முதல்வரானேன். பதவியேற்பு நிகழ்ச்சிக்கு ஜெயலலிதா வந்தார். 2002-ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு பாஜக ஆட்சி மீது குற்றம் சுமத்தினார்கள்.
எத்தனையோ விமர்சனங்கள் என் மீது வைக்கப்பட்டபோதும் அவர் அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. அந்த அளவிற்கு ஜெயலலிதா எனக்கு நண்பர்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக அங்கம் வகிக்காமல் போனது அதிமுகவினருக்கு தான் வருத்தம். எங்களுக்கு வருத்தம் ஏற்பட எந்த காரணமும் இல்லை.
ஜெயலலிதாவின் கனவுகளை சிதைக்கும் பாவத்தை செய்கிறவர்கள் தான் அதற்கு வருத்தப்பட வேண்டும்” என்று மோடி தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…