Pm modi says India growing all sector
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அனைத்து எம்.பி-க்களும் ஆக்கப்பூர்வமான விவாதங்களை முன்வைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி இன்று (ஜனவரி 31) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று முதல் மார்ச் 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்கிறார். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பதால் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன்பாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி,
“புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற முதல் அமர்வில் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது. ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினத்தன்று பெண்களின் வலிமையை நாம் பார்த்தோம்.
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழிகாட்டுதலுடன், பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரானது ஒரு வகையில் பெண்களின் திருவிழா.
அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னேற்றமடைந்து வருகிறது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பது தான் நமது அரசின் முதன்மையான நோக்கமாகும்.
எதிர்க்கட்சிகளின் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்தலுக்கு பின் முழு பட்ஜெட்டை பாஜக அரசு தாக்கல் செய்யும். மக்கள் ஆசியுடன் இந்த பயணம் தொடரும்.
ஜனநாயக விழுமியங்களைத் துண்டாடுவதை வழக்கமாகக் கொண்ட எம்.பி.க்கள் தங்களை சுயபரிசோதனை செய்வார்கள் என்று நம்புகிறேன்.
நாடாளுமன்றத்தில் மக்களுக்காக பணியாற்றியவர்கள் அனைவராலும் நினைவுகூரப்படுவார்கள். ஆனால், இடையூறுகளை ஏற்படுத்தியவர்கள் நினைவுகூரப்பட மாட்டார்கள்.
இந்த பட்ஜெட் கூட்டத்தொடரானது ஆக்கப்பூர்வமான கருத்துக்களை முன்வைப்பதற்கு ஒரு வாய்ப்பாகும். இந்த வாய்ப்பை தவறவிடாமல் தங்களால் இயன்றதைச் செய்யுமாறு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கேட்டுக் கொள்கிறேன்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திருப்பதியில் தனுஷ் படப்பிடிப்புக்கு அனுமதி ரத்து!
கொரோனா வைரஸ் பாதிப்பால் இத்தனை பேர் உயிரிழப்பா?
சாவர்க்கர் வாழ்க்கை வரலாறு படம்… ரிலீஸ் தேதி இதோ!
தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!
Pm modi says India growing all sector
