பிரிவினை அரசியல் செய்யும் திமுக: மோடி தாக்கு!

Published On:

| By Selvam

வேலூரில் இன்று (ஏப்ரல் 10) நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் வேலூர் தொகுதி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், தருமபுரி வேட்பாளர் செளமியா அன்புமணி, கிருஷ்ணகிரி நரசிம்மன், அரக்கோணம் கே.பாலு, திருவண்ணாமலை அசுவத்தாமன், ஆரணி கணேஷ்குமார் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

பின்னர் பிரதமர் மோடி பேசியபோது,

“மதம், மொழி, இனம், சாதி அடிப்படையில் தமிழக மக்களை திமுக பிரிக்க நினைக்கிறார்கள். திமுகவின் 50 ஆண்டுகால ஊழல்களை மக்கள் மத்தியில் தொடர்ந்து அம்பலப்படுத்துவேன்.

தமிழகத்தின் செங்கோலை நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நிறுவிய நிகழ்ச்சியை திமுக புறக்கணித்தது. காங்கிரஸ் கட்சியும் திமுகவும் தமிழகத்தின் கட்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்து கொடுத்துவிட்டார்கள். இதனால் தமிழகத்தின் மீனவர்கள் கட்சத்தீவு அருகே சென்று மீன்பிடித்தால் கைது செய்யப்படுகிறார்கள்.

ஆனால், காங்கிரஸும், திமுகவும் மீனவர்கள் மீது ஒரு பொய்யான அனுதாபத்தை மட்டும் காட்டுகிறார்கள். ஆனால், கட்சத்தீவை இலங்கை வசம் நாங்கள் தான் கொடுத்தோம் என்ற உண்மையை மட்டும் அவர்கள் சொல்வதே இல்லை.

இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களை மத்திய அரசு விடுவித்துள்ளது. இலங்கை அரசிடம் நான் அழுத்தம் கொடுத்ததால்,  மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து மீனவர்கள் விடுதலை ஆனார்கள். ஆகவே, காங்கிரஸும் திமுகவும் மீனவர்களுக்கு மட்டுமல்ல, தமிழக மக்கள் அனைவருக்கும் துரோகம் இழைத்தவர்கள்.

தமிழகம் பெண் சக்திகளை வணங்குகின்ற ஒரு மாநிலமாக உள்ளது. ஆனால், இந்தியா கூட்டணியை சேர்ந்தவர்கள் பெண்களை அவமதிக்கிறார்கள்.

இந்து மதத்தின் பெண் சக்தியை அழிப்பேன் என்று காங்கிரஸ் கட்சியின் இளவரசர் ராகுல் காந்தி பேசுகிறார். திமுகவிலும் சனாதனத்தை அழிப்பேன் என்று பேசுகிறார்கள். ராமர் கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சியை இரண்டு கட்சிகளும் புறக்கணித்தார்கள். ஜெயலலிதா அம்மாவை எப்படி திமுக மோசமாக இழிவுபடுத்தினார்கள் என்று அனைவருக்கும் தெரியும். அதேபோல இன்றும் பெண்களை திமுக இழிவுபடுத்துகிறார்கள். ஆகவே, தமிழகத்தின் எதிர்காலத்தை காப்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஒருவழியாக OTT-க்கு வந்தது சைரன்… எப்போ ரிலீஸ்ன்னு பாருங்க!

தமிழகத்தின் பள்ளிகளில் போதைப்பொருள் விற்பனை: மோடி குற்றச்சாட்டு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share