அமெரிக்காவில் மோடி

Published On:

| By Balaji

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார்.

கொரோனா பாதிப்பு காரணமாக பல உலகத் தலைவர்களும் வெளிநாட்டுப் பயணங்களை தள்ளி வைத்த நிலையில் மோடியும் தள்ளிவைத்தார்.

இந்நிலையில் டெல்லியில் இருந்து மூன்று நாள் பயணமாக அமெரிக்கா புறப்பட்ட பிரதமர் மோடி இன்று (செப்டம்பர் 23) அதிகாலை வாஷிங்டன் சென்றடைந்தார்.

அமெரிக்க அதிபர் ஜோ பிடெனுடனான சந்திப்பு, குவாட் உச்சிமாநாடு, ஐ.நா. பொது அவையில் உரை உள்ளிட்ட திட்டங்களோடு அமெரிக்கா சென்றுள்ளார் மோடி. வாஷிங்டன்னில் அமெரிக்க தலைவர்களை சந்திக்கும் மோடி சனிக்கிழமை நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. பொது அவையில் உரையாற்ற இருக்கிறார். அதற்கு முன்னதாக அமெரிக்க துணை அதிபரும் இந்திய வம்சாவழியினரான கமலா ஹாரிசையும் மோடி சந்திக்கிறார்.

இன்று பிற்பகல் வெள்ளை மாளிகையில் கமலா ஹாரிசை சந்தித்துப் பேசுகிறார் மோடி. இந்த சந்திப்பு அமெரிக்காவில் இருக்கும் இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்தோர் சமூகத்துக்கு மிக முக்கியமான சந்தர்ப்பம் என்று அமெரிக்க பத்திரிகைகள் எழுதியிருக்கின்றன.

மேலும் அமெரிக்க நிறுவனங்களின் சிஇஓ-க்களோடும் பிரதமர் சந்திப்பு நடத்துகிறார். குவால்காம், அடோப், பிளாக்ஸ்டோன் உள்ளிட்ட முக்கியமான பெரு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளோடு பேச்சு நடத்தி இந்தியாவில் அவர்களின் முதலீட்டு வாய்ப்புகளை பெருக்குவது பற்றி பிரதமர் ஆலோசனை நடத்துகிறார்.

இந்த வகையில் மோடிக்கும் இந்தியாவுக்கும் முக்கியமான பயணமாக அமைந்திருக்கிறது இப்பயணம்.

**-வேந்தன்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share