விமான விபத்து ஏற்பட்ட அகமதாபாத்துக்கு உடனடியாக விரைந்து சென்று தேவையான உதவிகளை வழங்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் விமான போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார். pm modi order to amit shah on flight accident at gujarat
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானம் AI171 இன்று (ஜூன் 12) மதியம் 1:38 மணியளவில் விபத்தில் சிக்கியது. இதில் 2 குழந்தைகள் மற்றும் 12 விமான ஊழியர்கள் உட்பட மொத்தம் 242 பேர் விமானத்தில் பயணம் செய்தனர்.
விமானம் புறப்பட்ட 5 நிமிடங்களில் ஏற்பட்ட இந்த விபத்தை அடுத்து விமான நிலைய அவசரக் குழு மர்றும் தீயணைப்புப் படை மற்றும் ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்தில் குவிந்து மீட்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
காயமடைந்த அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு வரும் நிலையில், இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 40ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே விமான விபத்து குறித்து அறிந்த பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு ஆகியோரிடம் பேசினார். விமான விபத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதை உறுதி செய்யுமாறும் அகமதாபாத்திற்கு விரைந்து செல்லுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதனையடுத்து அகமதாபாத்தை அடைந்த குஜராத் முதல்வர் பூபேந்திரபாய் படேல் விமான விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார். அவருடன் பேசிய அமித் ஷா மத்திய அரசு தேவையான உதவியை வழங்கும் என உறுதியளித்ததாக செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்.
