நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், இந்த ஆண்டில் தமிழகத்திற்கு மூன்றாவது முறையாக பிரதமர் மோடி நாளை (மார்ச் 4) வருகிறார்.
முன்னதாக கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்த பிரதமர் மோடி, திருப்பூரில் நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழாவில் பங்கேற்றார்.
பின்னர், பிப்ரவரி 28-ஆம் தேதி தூத்துக்குடியில் ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்க விழா மற்றும் நெல்லை பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்தநிலையில், பிரதமர் மோடி நாளை மீண்டும் சென்னை வருவது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மகாராஷ்டிராவில் இருந்து நாளை மதியம் 1.15 மணிக்கு விமானம் மூலம் புறப்பட்டு, 2.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார் பிரதமர் மோடி.
பின்னர் விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு கல்பாக்கம் ஹெலிகாப்டர் தளத்திற்கு வருகிறார்.
பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக சென்று மாலை 3.30 மணி முதல் 4.30 வரை ரூ.400 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள, கல்பாக்கம் அணு உலை ரியாக்டர் மேம்பாடு திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
இதனை தொடர்ந்து மீண்டும் கல்பாக்கம் ஹெலிகாப்டர் தளத்திற்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து சென்னை விமான நிலைய ஹெலிபேடு தளத்திற்கு செல்கிறார்.
பின்னர் சாலை மார்க்கமாக நந்தனம் ஒய்.எம்.சி.ஏ பொதுக்கூட்ட திடலுக்கு மாலை 5.10 மணிக்கு வருகிறார்.
அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மாலை 6.15 மணி வரை பங்கேற்கிறார். பின்னர் மீண்டும் சென்னை விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து மாலை 6.35 மணிக்கு தெலங்கானா செல்கிறார்.
பிரதமர் வருகையை ஒட்டி, சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
IPL 2024 : ரூ.3.60 கோடிக்கு வாங்கிய குஜராத் அணி வீரர் விபத்தில் சிக்கினார்!