பூமிக்கு புறப்பட்ட சுனிதா வில்லியம்ஸ்… உருக்கமுடன் கடிதம் எழுதிய மோடி

Published On:

| By christopher

pm modi letter to sunita williams

விண்வெளியில் இருந்து நீண்ட நாட்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் குறித்து பிரதமர் மோடி உருக்கமுடன் எழுதிய கடிதம் இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளது. pm modi letter to sunita williams

கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்வெளி வீரர் புட்ச் வில்மோருடன், இந்திய வம்சாவளியும், நாசா விண்வெளி வீராங்கனையுமான சுனிதா வில்லியம்ஸ் போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றார்.

அங்கிருந்து ஒரு வாரத்திற்கு பின்னர் புறப்படுவதாக இருந்த நிலையில், அவர்கள் சென்ற போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட பழுதால் பூமிக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.

எப்போது பூமிக்கு திரும்புகிறார் சுனிதா?

அப்போதிருந்து வில்மோர் மற்றும் சுனிதா இருவரும் பூமிக்கு திரும்ப மாற்று விண்கலத்தை எதிர்நோக்கி காத்திருந்தனர். இந்த நிலையில் அவர்களை மீட்பதற்காக நாசாவின் க்ரூ 9 மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் குழு டிராகன் விண்கலத்தில் சென்றது.

அந்த விண்கலம் சர்வதேச விண்வெளி மையத்தை நேற்று அடைந்தது. தொடர்ந்து ஒன்பது மாத கால நீண்ட இடைவெளிக்கு பிறகு அங்கிருந்து இருவரும் இந்திய நேரப்படி காலை 10:35 மணிக்கு டிராகன் விண்கலத்தில் பூமிக்கு புறப்பட்டனர். அவர்கள் 17 மணி பயணத்திற்கு பிறகு இந்திய நேரப்படி நாளை அதிகாலை 3:27 மணிக்கு புளோரிடா கடற்கரையில் தரையிறங்க உள்ளனர்.

வில்மோர் மற்றும் சுனிதாவின் வருகையை உலகமே உற்றுநோக்கி வருகிறது. இந்த நிலையில், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், அமெரிக்கா பயணத்திற்கு பின்னர் சுனிதா வில்லியம்ஸ் குறித்து பிரதமர் மோடி எழுதிய கடிதத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.

உங்களை நேரில் காண ஆவலுடன் காத்திருக்கிறோம்!

அதில், “இந்திய மக்களின் வாழ்த்துக்களை நான் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். அமெரிக்க சென்றிருந்த போது ஒரு நிகழ்ச்சியில், பிரபல விண்வெளி வீரர் மைக் மாசிமினோவை சந்தித்தேன். எங்கள் உரையாடலின் போது, ​​உங்கள் பெயர் வந்தது, உங்களைப் பற்றியும் உங்கள் பணியைப் பற்றியும் நாங்கள் எவ்வளவு பெருமைப்படுகிறோம் என்பதைப் பற்றி விவாதித்தோம். அந்த உரையாடலைத் தொடர்ந்து, உங்களுக்கு கடிதம் எழுதாமல் என்னால் இருக்க முடியவில்லை.

நான் அமெரிக்காவிற்கு வருகை தந்தபோது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் முன்னாள் அதிபர் பைடனை சந்தித்தபோது, ​​உங்கள் நலம் குறித்து விசாரித்தேன்.

1.4 பில்லியன் இந்தியர்கள் எப்போதும் உங்கள் சாதனைகளில் மிகுந்த பெருமை கொண்டுள்ளனர். சமீபத்திய முன்னேற்றங்கள் மீண்டும் உங்கள் ஊக்கமளிக்கும் மன உறுதியையும் விடாமுயற்சியையும் வெளிப்படுத்தியுள்ளன.

நீங்கள் ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இருந்தாலும், நீங்கள் தொடர்ந்து எங்கள் இதயங்களுக்கு நெருக்கமாக இருக்கிறீர்கள். இந்திய மக்கள் உங்கள் நல்ல ஆரோக்கியத்திற்காகவும் உங்கள் பணியில் வெற்றி பெறவும் பிரார்த்தனை செய்கிறார்கள்.

உங்கள் தாயார் போனி பாண்டியா உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பார், மறைந்த உங்கள் தந்தை தீபக் பாண்டியாவின் ஆசீர்வாதங்களும் உங்களுடன் இருக்கும் என்று நான் நம்புகிறேன். 2016 ஆம் ஆண்டு நான் அமெரிக்காவிற்குச் சென்றபோது அவரை உங்களுடன் சந்தித்ததை நான் அன்புடன் நினைவில் கொள்கிறேன்.

நீங்கள் திரும்பிய பிறகு, இந்தியாவில் உங்களைப் பார்க்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். இந்தியா தனது மிகவும் புகழ்பெற்ற மகள்களில் ஒருவரை வரவேற்பது மகிழ்ச்சியாக இருக்கும்.

உங்கள் கணவர் மைக்கேல் வில்லியம்ஸுக்கு எனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கும் திரு. பாரி வில்மோருக்கும் பாதுகாப்பாக திரும்ப எனது வாழ்த்துக்கள்” என மோடி அதில் குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share