எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியை தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் ஒப்பிட்டு பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ஆம் தேதி துவங்கியது. மணிப்பூர் விவகாரத்தால் அவை நடவடிக்கைகள் தொடர்ந்து முடங்கியுள்ளது.
இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றம் துவங்கிய நிலையில் எதிர்க்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. முன்னதாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன்பாக பாஜக மற்றும் இந்தியா எதிர்க்கட்சி கூட்டணி எம்.பிக்கள் தனித்தனியாக ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, “உலக நாடுகளின் மத்தியில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. அதற்காக நாம் தொடர்ந்து உழைத்துக்கொண்டிருக்கிறோம். நாட்டின் பெயரை மட்டும் பயன்படுத்தி மக்களை எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துகிறார்கள்.
கிழக்கிந்தியா கம்பெனி, பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா, இந்தியா முஜாகிதீன் போன்ற அமைப்புகளும் இந்தியா பெயரை பயன்படுத்துகின்றன. எதிர்க்கட்சிகள் விரக்தியும் ஏமாற்றமும் அடைந்துள்ளன. அவர்களது செயல்பாடுகள் தொடர்ந்து எதிர்க்கட்சிகளாக இருப்பதையே காட்டுகிறது” என்று பேசியுள்ளார்.
இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ள பாஜக எம்.பி ரவி சங்கர் பிரசாத், “பிரதமர் மோடியை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணி குறித்து பிரதமர் மோடி பேசும்போது கிழக்கிந்திய கம்பெனி, இந்தியன் முஜாகிதீன், பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா போன்ற அமைப்புகள் கூட இந்தியா என்ற பெயரை பயன்படுத்துகின்றனர் என்று விமர்சனம் செய்தார்” என தெரிவித்துள்ளார்.
செல்வம்