டெல்லியில் ரஷ்யா அதிபர் புதின்- ஆரத் தழுவி வரவேற்ற மோடி

Published On:

| By Mathi

Putin India Modi

இந்தியா வருகை தந்துள்ள ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினை நேற்று (டிசம்பர் 4) டெல்லி விமான நிலையத்துக்கு சென்று ஆரத் தழுவி பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். விமான நிலையத்தில் இந்தியாவின் பாரம்பரிய நடனங்களுடன் புதினுக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

டெல்லி விமான நிலைய வரவேற்பைத் தொடர்ந்து, இருவரும் ஒரே காரில் பிரதமர் மோடியின் இல்லத்துக்கு சென்றனர். அங்கு புதினுக்கு இரவு விருந்து அளித்தார் பிரதமர் மோடி.

ADVERTISEMENT

புதினுக்கு, ஜனாதிபதி மாளிகையில் இன்று காலை முப்படைகளின் அணிவகுப்புடன் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகள் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்துகிறார் புதின்.

டெல்லியில் நடைபெறும் இந்தியா- ரஷ்யா இடையேயான 23-வது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் புதின் பங்கேற்கின்றனர். அப்போது இருநாடுகளிடையேயான வர்த்தக உறவு உள்ளிட்டவை தொடர்பாக இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதன் பின்னர் இருநாடுகளிடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. நாளை மாலை, புதினுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரவு விருந்து அளிக்கிறார்.

ADVERTISEMENT

இந்தியா- ரஷ்யா ராணுவ ஒத்துழைப்பு குழு கூட்டம்

இதனிடையே டெல்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆண்ட்ரி பெலூசோவ் ஆகியோர் கூட்டாக இந்தியா – ரஷ்யா ராணுவம் மற்றும் ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான 22வது ஆணையக் கூட்டத்திற்கு நேற்று தலைமை தாங்கினர்.

ADVERTISEMENT

டெல்லியில் உள்ள மானெக்ஷா மையத்தில் நேற்று (டிசம்பர் 4) இந்த கூட்டம் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோருக்கு இடையேயான 23வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சிமாநாட்டிற்கு முன்னதாக இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இந்தியா-ரஷ்யா உறவு ஆழமான நம்பிக்கை, பொதுவான கொள்கைகள் மற்றும் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் அமைந்திருப்பதை இரு தரப்பினரும் மீண்டும் வலியுறுத்தினர்.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சுயசார்பு இந்தியா தொலைநோக்குப் பார்வையின் கீழ், உள்நாட்டுப் பாதுகாப்புத் தொழில்துறையின் திறனை உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஆகிய இரண்டிற்கும் மேம்படுத்த, இந்திய அரசின் உறுதியை எடுத்துரைத்தார்.

மேலும், முக்கியமான சிறப்புத் தொழில்நுட்பங்களில் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளையும் அவர் வலியுறுத்தினார்.

ரஷ்யப் பாதுகாப்புத் துறை அமைச்சர், பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்த இரு நாடுகளின் உறவை மேலும் பலப்படுத்தவேண்டும் என்று கூறினார். பல ஆண்டுகால நட்பு மற்றும் உத்திசார் ஒத்துழைப்பால் இரு நாடுகளும் பிணைக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

ரஷ்யப் பாதுகாப்புத் தொழில் நிறுவனங்கள், பாதுகாப்பு உற்பத்தியில் இந்தியா சுயசார்பு அடைவதற்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார். மேலும், 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள 23வது கூட்டத்திற்குத் தலைமை தாங்க, அமைச்சர் பெலூசோவ், ராஜ்நாத் சிங்கை ரஷ்யாவிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தார்.

இறுதியில், இரு அமைச்சர்களும், தற்போதுள்ள மற்றும் எதிர்கால ஒத்துழைப்புக்கான திட்டங்களை எடுத்துக்காட்டி, இந்த ஆணையக் கூட்டத்தின் விதிமுறைகளில் கையெழுத்திட்டனர்.

முன்னதாக, இரு நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்களும் டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share