தமிழ்நாட்டின் எதிரி திமுக: மோடி தாக்கு!

Published On:

| By Selvam

Dmk is anti Tamil

திமுக தமிழ்நாட்டின் எதிரி என்று பிரதமர் மோடி இன்று (மார்ச் 15) கடுமையாக விமர்சித்துள்ளார்.

கன்னியாகுமரியில் இன்று பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியபோது, “திமுக தமிழ்நாட்டின் தமிழ் பண்பாட்டின் எதிரி. சாதாரண எதிரியல்ல, நமது கடந்தகால பெருமைகளையும் பாரம்பரியத்தையும் கண்மூடித்தனமாக எதிர்க்கின்ற எதிரி.

அயோத்தியில் நடந்த கும்பாபிஷேக விழாவை பார்ப்பதற்கு கூட திமுகவை சேர்ந்த யாருக்கும் விருப்பமில்லை. மாறாக, தமிழகத்தில் அந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கு கூட தடை விதித்தார்கள். அந்த அளவுக்கு அவர்களுக்கு வெறுப்பு. உச்சநீதிமன்றமே தமிழக அரசை கண்டிக்கும் ஒரு நிலை ஏற்பட்டது. நமது கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியத்தின் மீது திமுக எப்போதும் வெறுப்பை கக்கிக்கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டின் அடையாளத்தை, பெருமையை பாதுகாக்க பாஜக என்றும் முன்னணியில் நிற்கிறது. அவர்களது பேச்சுக்களை நாங்கள் பொருட்படுத்துவதில்லை.

ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்த திமுக, காங்கிரஸ் அரசு மெளனம் காத்தது. நமது பாரம்பரிய விளையாட்டை அழிக்க நினைத்தார்கள். ஜல்லிக்கட்டு போட்டியை முழு உற்சாகமாக மீண்டும் நடத்த ஏற்பாடு செய்தது நமது பாஜக அரசு. ஜல்லிக்கட்டு நமது தமிழகத்தின் பெருமை.

ஜல்லிக்கட்டாக இருந்தாலும் சரி தமிழகத்தின் எந்த பாரம்பரியமிக்க சிறப்பம்சமாக இருந்தாலும் சரி மோடி இருக்கும் வரை அதை யாரும் அசைக்கமுடியாது. அந்த பெருமையை நான் காப்பாற்றுவேன். இது மோடியின் கேரண்டி. தமிழர்களின் பெருமையை நாடறிய செய்ய நாடாளுமன்ற மைய மண்டபத்தில் செங்கோலை நிறுவினோம். அதை கூட திமுகவினர் புறக்கணித்துள்ளனர்.

இந்தியா கூட்டணியை சேர்ந்தவர்கள் தமிழக மக்களின் உயிரோடு விளையாடும் குற்றத்தை செய்தவர்கள். நமது மீனவர்களுக்கு இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் உயிருடன் திரும்ப முடியாது என்று சொல்லப்பட்டது.

ஆனால், நான் சும்மா தூங்கிக்கொண்டிருக்கவில்லை. அவர்களை விடுதலை செய்வதற்காக எத்தனை வழிகள் உண்டோ அத்தனை கதவுகளையும் உடைத்தேன். கொஞ்சம் கூட சேதாரம் இல்லாமல் அத்தனை தமிழ் மீனவர்களையும் உயிருடன் மீட்டு வந்தோம்.

நமது மீனவர்கள் இலங்கை கடற்புற எல்லைப்பகுதிக்கு ஏன் செல்ல வேண்டும்? இது யாருடைய குற்றம்? நீங்கள் கொஞ்சம் சிந்தித்து பார்க்க வேண்டும். நமது மீனவ சகோதர, சகோதரிகளுக்கு இதுபோன்ற துன்பங்கள் நேர நமது அரசு அனுமதிக்காது. அவர்களுக்கு என்றும் துணை நிற்கும்.

திமுகவும் காங்கிரஸ் கட்சியும் செய்த குற்றத்தை இனியும் மக்கள் ஏற்க மாட்டார்கள். அவர்களது பாவ கணக்குகளுக்கு பதில் சொல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது.

இந்தியா கூட்டணிக்கு பெண்களை ஏமாற்றவும், அவமானப்படுத்தவும் மட்டும் தான் தெரியும். பாஜக தான் பெண்களை மதிக்கின்ற கட்சி.

என்னால் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள முடியவில்லையே என்று மிகவும் வருத்தப்படுகிறேன். இது எனக்கு மிகப்பெரிய குறையாக உள்ளது. இந்த குறைபாட்டை போக்க தொழில்நுட்ப உதவியை நாடியுள்ளேன். உங்களிடம் இனி ஏஐ  தொழில்நுட்ப உதவியுடன் நான் தமிழில் பேச போகிறேன். இனிமேல் எக்ஸ் தளத்திலும், நமோ தளத்திலும் தொழில்நுட்ப உதவியுடன் நான் தமிழில் பேச போகிறேன்.

இதன்மூலம் நான் சொல்ல நினைக்கும் செய்திகளை உங்களிடம் இனிமையான தமிழ் மொழியில் சொல்ல முடியும் என்று நம்புகிறேன்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சென்னையில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா: எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் அறிவிப்பு!

திமுக – காங்கிரஸ் கூட்டணியின் தலைக்கணம் துடைத்தெறியப்படும்: மோடி காட்டம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share