பிரதமர் மோடி இன்று சென்னை வந்தார். அவரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் சென்னை விமான நிலையத்தில் வரவேற்றனர்.
ஹைதராபாத்தின் பேகம்பட் விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு மதியம் 2.45 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்தார். அங்குள்ள புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.
மாலை 3.25 மணிக்கு விமான நிலையத்திலிருந்து விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் நேப்பியர் பாலம் அருகே உள்ள ஐ.என்.எஸ் அடையாறு கடற்படை தளத்திற்கு செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சென்று சென்னை – கோவை வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.
பின்னர் மாலை 4.30 மணியளவில் காமராஜர் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் நடைபெறும் ராமகிருஷ்ணா மடத்தின் 125-ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்கிறார்.
மாலை 6.30 மணியளவில் பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் தாம்பரம் – செங்கோட்டை இடையே வாரம் 3 முறை இயக்கப்படும் விரைவு ரயில் சேவை, திருத்துறைப்பூண்டி – அகஸ்தியம்பள்ளி இடையே முடிக்கப்பட்டுள்ள அகல ரயில் பாதை உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இரவு 7.45 மணிக்கு தனி விமானம் மூலம் கர்நாடகா மாநிலம் மைசூருக்கு செல்கிறார்.
செல்வம்