திமுக தலைவர் ஸ்டாலினை பிரதமர் நரேந்திர மோடி நலம் விசாரித்தார்.
கொரோனா பாதிப்பு சமூகப் பரவலாக மாறாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமலில் உள்ளது. ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி, வைகோ, திருமாவளவன் என அனைத்து தலைவர்களும் வீடுகளில் தங்கியிருந்து அவ்வப்போது தொண்டர்களுக்கு அறிவுறுத்தல் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக திமுக மாவட்டச் செயலாளர்களை தொடர்புகொண்டு பேசிய ஸ்டாலின், சென்னையில் பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட உதவிகளையும் வழங்கினார்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திரமோடி இன்று (ஏப்ரல் 5) காலை திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து நலம் விசாரித்தவர், தயாளு அம்மாளின் உடல்நலம் குறித்தும் அக்கரையோடு கேட்டறிந்தார்.
தொடர்ந்து, பிரதமர் உடல்நலன் குறித்து ஸ்டாலின் விசாரித்தார். ஏப்ரல் 8 ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றக் கட்சிகளின் கூட்டத்துக்கு திமுகவுக்கு அழைப்பு வந்துள்ளதாகவும், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் தகவல் தந்துள்ளார் என்றும் பிரதமரிடம் தெரிவித்த ஸ்டாலின், அக்கூட்டத்தில் நாடாளுமன்ற மக்களவை தி.மு.க. குழுத்தலைவர் டி.ஆர் பாலு கலந்து கொள்வார் என்பதையும் உறுதிப்படுத்தினார்.
மேலும், நாட்டின் சுகாதார நிலைமை சீரடைய ஆக்கபூர்வமான ஆலோசனைகளை மத்திய அரசுக்கு வழங்குவோம் எனவும், மத்திய அரசு ஒவ்வொரு இந்திய மக்களின் வாழ்க்கைக்கும் அரணாக இருக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். அதற்கு ‘மத்திய அரசு கவனமாகச் செயல்பட்டு வருகிறது’ என்று பிரதமர் உறுதியளித்தார். இதேபோல் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஸ்டாலினை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.
**எழில்**
