பத்தாம், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், எந்தவிதமான அழுத்தமும் இல்லாமல் ஆக்கப்பூர்வமான உணர்வோடு, உங்கள் தேர்வுகளை எழுதுங்கள் என்று பிரதமர் மோடி இன்று (பிப்ரவரி 23) மனதில் குரல் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். Modi advise students preparation
ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று மனதில் குரல் நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி பேசிவருகிறார். அந்தவகையில், பிப்ரவரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று நாட்டு மக்களிடம் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது,
“கடந்த மாதம் தான் இஸ்ரோ விண்ணில் செலுத்திய 100ஆவது செயற்கைக்கோளின் சாட்சியாக தேசமே இருந்தது. இது வெறும் எண்ணிக்கை மட்டுமல்ல, மாறாக அன்றாடம் புதிய உச்சங்களைத் ஸ்பரிசிக்கும் நமது உறுதிப்பாட்டையும் அடையாளப்படுத்துகிறது.
நமது விண்வெளிப்பயணப் பயணம் மிக எளிய முறையிலே தான் தொடங்கியது. இதிலே ஒவ்வோர் அடியிலும் சவால்கள் இருந்தன. ஆனால், நமது விஞ்ஞானிகள் வெற்றிக்கொடியை நாட்டியபடி தொடர்ந்து முன்னேறினார்கள்.

காலப்போக்கில் விண்வெளியின் இந்தப் பாய்ச்சலில் நமது வெற்றிகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகத் தொடங்கியது. ஏவுகலன் அமைப்பதாகட்டும், சந்திரயானின் வெற்றியாகட்டும், மங்கள்யானாகட்டும், ஆதித்யா எல்-1 அல்லது ஒரே ஒரு ஏவுகலன் மூலமாக, ஒரே முறையில், 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் வரலாறு காணாத செயல்பாடாகட்டும், இஸ்ரோவின் வெற்றித்தொடர் மிகவும் பெரியது.
கடந்த பத்தாண்டுகளில் சுமார் 460 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டிருக்கின்றன. இவற்றிலே மற்ற நாடுகளின் பல செயற்கைக்கோள்களும் அடங்கும். அண்மை ஆண்டுகளின் ஒரு பெரிய விஷயம் என்னவென்றால், விண்வெளி விஞ்ஞானிகள் கொண்ட நமது குழுவிலே பெண்சக்தியின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதுதான்.
இன்று விண்வெளித்துறை நமது இளைஞர்களுக்கு விருப்பமான ஒன்றாக ஆகியிருக்கிறது என்பது மிகுந்த உவகையை எனக்கு அளிக்கிறது. வாழ்க்கையை விறுவிறுப்பான, சுவாரசியமான வகையில் அனுபவிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு, விண்வெளித்துறை ஒரு மிகச் சிறப்பான தேர்வாகி வருகிறது.
நண்பர்களே, இது பத்தாம் – பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகளுக்கான காலம். நம்முடைய இளம் நண்பர்கள், அதாவது தேர்வு வீரர்களுக்கு, அவர்கள் எதிர்நோக்கும் தேர்வுகளின் பொருட்டு பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீங்கள் எந்தவிதமான அழுத்தமும் இல்லாமல், ஆக்கப்பூர்வமான உணர்வோடு, உங்கள் தேர்வுகளை எழுதுங்கள். ஒவ்வோர் ஆண்டும் தேர்வுகளை எதிர்கொள்வோம் நிகழ்ச்சியில் நாம் நமது தேர்வெழுதும் வீரர்களுக்குத் தேர்வுகளோடு தொடர்புடைய பலப்பல விஷயங்கள் குறித்து விவாதிக்கிறோம்.
கடந்த ஆண்டுகளில் சிறந்து விளங்கியவர்களும் தங்கள் கருத்துக்கள், அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். பல இளைஞர்கள், அவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள் என இந்த முறை எனக்குப் பலர் கடிதங்கள் எழுதியிருக்கிறார்கள்.
இந்த வடிவம் அவர்களுக்கு மிகவும் பிடித்திருப்பதாக அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஏனென்றால் இதிலே ஒவ்வொரு விஷயம் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டன. இன்ஸ்டாகிராமிலும் கூட நமது இளைய நண்பர்கள், இந்த பகுதிகளை அதிக எண்ணிக்கையில் பார்த்திருக்கிறார்கள்.
உங்களில் பலர் இந்த நிகழ்ச்சியை தில்லியின் சுந்தரி நர்ஸரியில் அமைத்திருப்பதை விரும்பியிருக்கிறீர்கள். தேர்வுகளை எதிர்கொள்வோம் நிகழ்ச்சியின் இந்தப் பகுதிகளை இதுவரை பார்க்காத நமது இளைய நண்பர்கள், கண்டிப்பாக இவற்றைப் பாருங்கள்.
இந்த பகுதிகள் அனைத்தையுமே நமோ செயலியில் உங்களால் காண முடியும். மீண்டும் ஒருமுறை தேர்வுகளை எதிர்கொள்ளவிருக்கும் நமது வீரர்களுக்கான நான் அளிக்க விரும்பும் செய்தி என்னவென்றால், சந்தோஷமாக இருங்கள், அழுத்தமேதும் இல்லாமல் இருங்கள் என்பது தான்” என்று மோடி தெரிவித்துள்ளார். Modi advise students preparation