‘பிஎம் கிசான் யோஜனா’ என்ற பெயரில் போலியான ‘ஆப்’ ஒன்றை தயாரித்து, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் இருக்கும் சேமிப்பை அப்படியே அபகரித்துக் கொள்ளும் மோசடி, தமிழகத்தில் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘பிஎம் கிசான் யோஜனா’ திட்டத்தின் கீழ் இந்தியாவில் விவசாயிகள் தங்களது விவசாய பணியை மேற்கொள்ள ஆண்டுக்கு 6,000 ரூபாய் மானியத் தொகை, மூன்று தவணைகளாக அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
மத்திய அரசின் இந்தத் திட்டம் மூலம் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். தகுதியுள்ள விவசாயிகள் இந்தத் திட்டத்தின்கீழ் விண்ணப்பித்தால், அவர்களது விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு மானியத் தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.
இந்த நிலையில் ‘பிஎம் கிசான் யோஜனா’ திட்டத்தின் பெயரை வைத்து ‘பிஎம் கிசான் யோஜனா’ என்ற பெயரில் போலியான ‘ஆப்’ ஒன்றை மோசடி பேர்வழிகள் தயாரித்து வெளியிட்டு, மத்திய அரசின் மானியம் பெற இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள் என்று கூறி, அந்த செயலி மூலம் அப்பாவி விவசாயிகள் சிலரின் ‘கூகுள் பே’ கணக்கில் இருந்து பணத்தை அபகரித்துள்ள அதிர்ச்சிகரமான மோசடி சம்பவங்கள் நடந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மோசடி சம்பவங்கள் குறித்து பேசியுள்ள தமிழக சைபர் க்ரைம் போலீஸார், “பிஎம் கிசான் யோஜனா என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள மோசடி செயலியானது, வாட்ஸ் அப் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்கள் மூலம் பகிரப்பட்டு வருகிறது.
இதன்மூலம், பயனாளிகளின் எஸ்எம்எஸ் பயன்பாட்டையும், செல்போன் உள்ளிட்ட சாதனங்களின் இயக்கங்களையும் கட்டுப்படுத்தி, அதில் உள்ள தரவுகளை சேகரித்து, யுபிஐ செயலிகள் மூலம் மோசடி பரிவர்த்தனைகளில் ஈடுபடுகின்றனர்.
எனவே, பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இதுபோன்ற மோசடிக்கு ஆளாகியிருந்தால் 1930 என்ற கட்டணமில்லா உதவி எண்ணை தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் அளிக்கலாம்” என்று தெரிவித்துள்ளனர்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: குளிர்காலத்தில் ஏற்படும் சளி, இருமலைத் தடுக்க உதவும் சிம்பிள் வைத்தியம்!
டாப் 10 நியூஸ்: குடியரசு தலைவர் தமிழகம் வருகை முதல் உதயநிதி பிறந்தநாள் வரை!