கொளுத்தும் வெயில்: உயர்மட்ட ஆலோசனையில் பிரதமர் முக்கிய அறிவுரை!

Published On:

| By Kavi

இந்த ஆண்டு வழக்கத்தை விட வெப்பம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கும் நிலையில், பிரதமர் மோடி வெப்ப காலத்தைச் சமாளிப்பது, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பாக இன்று (மார்ச் 6)உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.

1901ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த மாதம் பிப்ரவரியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதுபோன்று அடுத்த சில மாதங்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் எனவும் கூறியது.

ADVERTISEMENT

இதனால் விளை பயிர்கள் பாதிக்கப்பட்டு மகசூல் பாதிப்பு, தண்ணீர் பஞ்சம், வெயில் கால நோய்கள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி இன்று (மார்ச் 6) கோடையில் வெப்பமான காலநிலைக்கான தயார்நிலை குறித்து உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ADVERTISEMENT

அப்போது அடுத்த சில மாதங்களுக்கான வானிலை குறித்து பிரதமரிடம் விளக்கப்பட்டது. ராபி உள்ளிட்ட முக்கியப் பயிர்களின் விளைச்சல் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

பாசன நீர் விநியோகம், கால்நடைகளுக்கான தீவனம், குடிநீர் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

அவசரக் காலங்களில் மாநிலங்களின் தயார்நிலை மற்றும் மருத்துவ உள்கட்டமைப்பு பற்றிய ஆய்வு, வெப்பநிலை தொடர்பாக ஏற்படும் பேரிடர் தயார்நிலை, தணிப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்தும் பிரதமருக்கு விளக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “பொதுமக்கள், மருத்துவ நிபுணர்கள், நகர மற்றும் பஞ்சாயத்து நிர்வாகிகள், தீயணைப்பு வீரர்கள் போன்ற பேரிடர் மீட்புக் குழுவினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு தனித்தனியே விழிப்புணர்வு மேற்கொள்ளத் தயாரிப்பு நிலையை உருவாக்க வேண்டும் .

கடும் வெப்பநிலையை எதிர்கொள்வது தொடர்பாகப் பள்ளிகளில் குழந்தைகளுக்குப் பலவகை ஊடகங்கள் மூலம் எடுத்துரைக்க வேண்டும்.

கோடைக் காலத்தில் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை பற்றி குறும்படங்கள், கையேடுகள் போன்றவை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இந்திய வானிலை ஆய்வு மையம் அன்றாட காலநிலை முன்னறிவிப்பை வெளியிட வேண்டும்.

தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பொதுமக்கள் கடைப்பிடிக்கும் விதமாக, இது குறித்து சில நிமிடங்கள் தொலைக்காட்சிச் செய்தி அலைவரிசைகளிலும், பண்பலை வானொலியிலும் இடம்பெறச் செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

அனைத்து மருத்துவமனைகளிலும் விரிவான தீயணைப்புத் தணிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். தீயணைப்பு வீரர்கள் மூலம் அனைத்து மருத்துவ மனைகளிலும், தீயணைப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும்.

நீர்த்தேக்கங்களில் தண்ணீர் மற்றும் கால்நடைகளுக்கான தீவன இருப்பை உறுதி செய்ய வேண்டும். கடுமையான பருவநிலைக் காலத்தில் போதிய அளவு உணவு தானியங்கள் கையிருப்பில் இருப்பதை இந்திய உணவுக் கழகம் உறுதி செய்ய வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.

பிரியா

உலகம் சுற்றும் வாலிபன்: அஜித்தின் அடுத்த பிளான்!

தலைமைப் பொறுப்பிற்குத் தகுதியானவரா? எடப்பாடியை விமர்சித்த அமர் பிரசாத் ரெட்டி

PM chairs high level meeting
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share