தமிழக அரசின் பள்ளி கல்வித் துறை பாடத் திட்டங்களின் கீழான பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் இன்று மார்ச் 2-ந் தேதி தொடங்குகிறது.
தமிழகம் முழுவதும் 7,545 பள்ளிகளில் இருந்து 8.25 லட்சம் மாணவர்கள் பிளஸ் டூ தேர்வு எழுதுகின்றனர். சுமார் 27,783 பேர் தனித் தேர்வர்களாகவும் பிளஸ் டூ தேர்வு எழுதுகின்றனர். சிறைகளில் இருந்து 281 பேர் இத்தேர்வை எழுத உள்ளனர்.
பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், “ பொதுத்தேர்வை எழுதவுள்ள பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும், எதிர்வரும் 11-ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு எழுதவுள்ள பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் வாழ்த்துகள்!
பதற்றமின்றித் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெறுங்கள். உங்களுக்கான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. உறுதியுடன் படித்திடும் உங்களுக்கு ஊக்கமளித்து உயர்த்திட நமது Dravidian Model அரசு இருக்கிறது” என தெரிவித்திருந்தார்.
தவெக தலைவர் விஜய், “தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதும் என் அன்புத் தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் வாழ்த்துகள். நாளைய வளமான சமுதாயத்தை உருவாக்க உள்ள நீங்கள் அனைவரும் இந்தத் தேர்வினைப் பதற்றமின்றி, அச்சமின்றி, துணிவுடன் எதிர்கொள்ளுங்கள். உயர்கல்வியில் சிறந்து விளங்கவும் அட்வான்ஸ் வாழ்த்துகள்!” என தெரிவித்துள்ளார்.
