”தயவுசெய்து விட்டுவிடுங்கள்” : அரசியல்வாதிகளுக்கு ஆர்.ஜே.பாலாஜி கோரிக்கை!

Published On:

| By christopher

"Please leave it alone": RJ Balaji's request to politicians!

தான் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில், அரசியல்வாதிகளுக்கு நடிகர் ஆர்.ஜே.பாலாஜி கோரிக்கை வைத்துள்ளார்.

ஆர். ஜே. பாலாஜி முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் ‘சொர்க்கவாசல்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நேற்று (நவம்பர் 23) நடைபெற்றது.

இதில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு டிரெய்லரை வெளியிட்டனர்.

Image

அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சொர்க்கவாசல்’ படத்தில் ஆர். ஜே. பாலாஜி, செல்வராகவன், நட்டி என்கிற நட்ராஜ், நடிகை சானியா ஐயப்பன், ஷஃரப் உதீன், ஹக்கீம் ஷா, பாலாஜி சக்திவேல், கருணாஸ், ரவி ராகவேந்திரா, அந்தோணி தாசன், சாமுவேல் ராபின்சன், எழுத்தாளர் ஷோபா ச‌க்தி, மௌரிஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பிரின்ஸ் ஆண்டர்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைத்திருக்கிறார். சர்வைவல் க்ரைம் திரில்லர் ஜானரிலான இந்த திரைப்படத்தை ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கின்றன‌.

இந்த நிகழ்வில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி பேசியதாவது, “இந்த குழுவுடன் எனக்கு ஒன்றரை ஆண்டு கால பயணம் இருக்கிறது. இந்தப் படத்தில் நிறைய அறிமுக கலைஞர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். நான் நடித்த ஒரு படத்தை ரிலீஸிற்கு நான்கு நாள் இருக்கும் இந்த தருணத்திலும் நான் இதுவரை பார்க்கவில்லை. அதற்கு காரணம் நான் இவர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை.

சொர்க்கவாசல் படத்தை பற்றி பேசுவதில் எனக்கு உடன்பாடு இருந்ததில்லை. தற்போது படத்தின் முன்னோட்டம் வெளியாகி இருக்கிறது. இதற்கு பெரும் வரவேற்பு கிடைக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன் ஒரு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் எதையாவது பேச வேண்டும் என்று இருந்தது. ஆனால் நான் தற்போது என்ன நினைக்கிறேன் என்றால்.. பேசுவதற்கு எதுவும் இல்லை என்றாலும் பரவாயில்லை. படத்தின் கன்டென்ட் நன்றாக இருந்தால் அது மக்களிடம் ரீச் ஆகிவிடும். நான் 2006ம் ஆண்டிலிருந்து இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

விற்பனை செய்வதற்காக ஒரு கடைக்கு நாம் பிஸ்கட்டை எடுத்து சென்று விட்டால் அதை மற்றவர்கள் நன்றாக இருக்கிறது. இல்லை என்று சொல்லத்தான் செய்வார்கள். அதேபோல் தான் சினிமாவும். ரசிகர்களை சென்றடைந்த பின் ஒரு படத்தைப் பற்றி அவர்கள் விமர்சனம் செய்வார்கள். ஒரு படம் வெளியான பிறகு அதைப்பற்றி யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். யூடியூபில் விமர்சிக்கலாம்… ட்விட்டரில் விமர்சிக்கலாம் .. இன்ஸ்டாகிராமில் விமர்சிக்கலாம். அது அவர்களுடைய சுதந்திரம். யாரும் அவர்களிடத்தில் இருக்கும் செல்போனை பறிக்க முடியாது. அதனால் விமர்சனம் குறித்த கட்டுப்பாடு நம்மிடத்தில் இல்லை.

சொர்க்கவாசல் படத்தில் கன்டென்ட் நன்றாக இருக்கிறது. இந்தப் படத்தை பார்த்து நன்றாக இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காகத் தான் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இவர்கள்தான் என்னுடைய அடுத்த படத்தின் தயாரிப்பாளர்கள். இந்தப் படத்தின் விநியோகஸ்தர்கள்.

தற்போதெல்லாம் பயம் அதிகமாக ஏற்படுகிறது. வெளியில் தேசியக்கொடி ஒன்றினை கையில் ஏந்தி கொண்டு இந்தியன் என்ற உணர்வோடு இருந்தால் அதற்கும் ஏதாவது விமர்சனம் செய்வார்களோ என்ற பயம் ஏற்படுகிறது. நான் பாவாடையும் கிடையாது. சங்கியும் கிடையாது.

அனைத்து அரசியல் கட்சியின் ஐ டி விங்கிடம் ஒரு பணிவான வேண்டுகோள் வைக்கிறேன். நீங்கள் அரசியலை மட்டும் பாருங்கள். அரசியல்வாதிகளுடன் சண்டை போடுங்கள். சினிமாவை விட்டு விடுங்கள். சினிமாவில் வாரந்தோறும் திரைப்படங்கள் வெளியாகின்றன‌. திரைப்படங்களை விமர்சித்து அதனை அழிப்பதில் எதற்காக உங்களுடைய ஆற்றலை வீணடிக்கிறீர்கள்.

அதேபோல் ரசிகர்களிடத்திலும் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். அதாவது ரஜினி ரசிகர்கள் -கமல் ரசிகர்கள்- விஜய் ரசிகர்கள்- அஜித் ரசிகர்கள்- என எல்லா ரசிகர்களும் நல்ல திரைப்படங்களை பாருங்கள். படம் பிடிக்கவில்லை என்றால் விமர்சனம் செய்யுங்கள். அது உங்கள் உரிமை. அதை விடுத்து அவர் படம் வந்தால் வச்சு செய்ய வேண்டும், இவர் படம் வந்தால் அடிக்க வேண்டும் என்று உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள்” என்று ஆர்.ஜே. பாலாஜி பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இராமானுஜம்

ஏ.ஆர்.ரகுமானை விட்டு பிரிந்தது ஏன்? : சாய்ரா பானு விளக்கம்!

“பிரிந்து சென்றவர்களை எடப்பாடி ஒன்றிணைக்கிறார்” – ராஜேந்திர பாலாஜி

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share