ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகள் முன்னேறி உள்ளது. இந்த நிலையில் குஜராத் அணிக்கு எதிராக போராடி தோற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் செல்லுமா? என்ற கேள்வி கொஞ்சம் பலமாக எழுந்துள்ளது.
2024 ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 போட்டிகளில் விளையாடி ஆறு வெற்றிகளை பெற்றுள்ளது. புள்ளி பட்டியலில் 12 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.
அகமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நேற்று (மே 10) நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக போராடி தோற்றது.
இதனால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது உறுதியாகாத நிலையில், ரன்ரேட்டிலும் சரிவை சந்தித்துள்ளது.
இந்த நிலையில் சென்னை அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் மீதமுள்ளன. பலம் வாய்ந்த ராஜஸ்தான் மற்றும் கடைசி 4 போட்டிகளில் தொடர் வெற்றிகளை குவித்துள்ள பெங்களூரு அணிக்கு எதிராக வெற்றி பெறுவது முக்கியமானதாகும். அப்படி நடந்தால் மட்டுமே பிளே ஆஃப் கனவு உறுதியாகும்.
இல்லையென்றால், 12 போட்டிகளில் 6ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் ஐந்து, ஆறாவது இடத்தில் இருக்கும் டெல்லி மற்றும் லக்னோ அணிகளின் வெற்றி, தோல்வியை பொறுத்தே சென்னையின் பிளே ஆஃப் வாய்ப்பு உறுதி செய்யப்படும்.
மேலும் சிஎஸ்கே அணியில் முன்னணி வேகப் பந்துவீச்சாளர்களான பதிரானா, தீபக் சாஹர் மற்றும் முஸ்தாபிசூர் ரஹ்மான் ஆகியோர் விலகி உள்ளதும் அந்த அணியின் ரசிகர்களுக்கு கெட்ட செய்தியாக உள்ளது.
இதையெல்லாம் தாண்டி சென்னை அணி எப்படி தகுதி பெறும் என்பது மஞ்சள் படையின் ரசிகர்களுக்கு முன்னால் இருக்கும் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா